
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது
பதுளை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
எல்டப் மேல் பிரிவை சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்டப் மேல் பிரிவில் நபர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பசறை ஆக்கரத்தன்னை பகுதியில் முகாமிட்டுள்ள விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு விரைந்த விசேட அதிரடி படை அதிகாரிகள் சந்தேகத்துக்கு இடமான பகுதியை சுற்றி வளைத்து தேடுதலை மேற்கொண்டனர்.
இதன் போது எல்டப் மேற்பிரிவு காட்டு பகுதியில் சூட்சுமமான முறையில் இரண்டு பெரல்களில் கசிப்பு உற்பத்திக்கு ஆயத்தமான நிலையில் வைக்கப்பட்டிருந்த 139250 மில்லி லீட்டர் கோடாவை விஷேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபருக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
