20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்கள் கைது

-அம்பாறை நிருபர்-

பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்களை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5 ஆம் கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 14 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு வீடு ஒன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள் நுழைந்தவர்கள் 39 இலட்சத்திற்கும் அதிகமான 20 பவுண் நகைகள் களவாடியதாக மறுநாள் முறைப்பாடு கிடைக்கப்பெற்ற நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது களவு இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர்கள் நோன்பு இரவு நேர வணக்க வழிபாட்டிற்காக பள்ளிவாசலுக்கு சென்ற சமயம் பார்த்து 3 சந்தேக நபர்கள் இச்செயலை மேற்கொண்டதுடன் 20 பவுண் நகைகளை குறித்த வீட்டின் ஜன்னலை உடைத்து எடுத்து சென்றிருந்தனர்.

இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட சவளக்கடை பொலிஸார் இத்திருட்டில் ஈடுபட்ட சாளம்பைக்கேணியை சேர்ந்த 33, 26, 28, வயது மதிக்க தக்க சந்தேக நபர்களை கைது செய்ததுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து களவாடி செல்லப்பட்ட 20 பவுண் நகைகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.

சந்தேக நபர்களை கல்முனை நீதிவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.