ஒரு இனத்தை அழிக்கவேண்டுமெனில் அதன் கலாச்சாரம் மொழி பண்பாடுகளை அழிக்கவேண்டும்

ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் அந்த இனத்தின் கலாச்சாரம் மொழி பண்பாடுகளை அழிக்கவேண்டும் என்ற கோட்பாட்டிற்கு அமைய இலங்கையில் பேரினவாதம் செயற்படுகின்றது என கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று செவ்வாய் கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இந்த நாடு பொருளாதார ரீதியாகவும் உலகத்தில் இருந்தும் அந்நியப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் நாட்டு நிலைமையை புரிந்து கொள்ளாது தொடர்ச்சியாக இந்த அடக்கு முறை இடம்பெறுகின்றது.

சிவன்ராத்திரி என்பது இந்துக்களுக்கு முக்கியமான தினம். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜந்திரன் உட்பட ஐயர் மற்றும் பக்தர்கள் மிருகதனமாக தாக்கப்பட்டு அதில் சிலர் கைதுசெய்யப்பட்டு இன்று வரை சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த காலகட்டத்திலே அரசாங்கமும் ஜனாதிபதியும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை கொண்டு வரவேண்டும் வட கிழக்கிலே அமைதியை கொண்டு வர வேண்டும், 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டும், புலம் பெயர் தேசத்தில் உள்ள முதலீட்டாளர்களை கவர்ந்து நாட்டில் முதலிடுவதற்க ஊக்கபடுத்த வேண்டும், இதன் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை உயர்த வேண்டும் என்று கூறுபவர்கள் மறைமுக நிகழ்ச்சி நிரலில் வடகிழக்கிலே தமிழர்களது கலை கலாச்சாரத்தினை ஒழிக்கும் முகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடாகவே இந்த வெடுக்க நாறிமலை சம்பவத்தை காணக்கூடியதாக உள்ளது.

இந்த நாட்டிற்கு சுபிட்சம் கிடைக்க வேண்டும் என்றால் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு வடகிழக்கு இணைக்கப்பட வேண்டும் எங்களது பிரதேசத்திலே சுய நிர்ணயத்துடன் கூடய ஆட்சி பொலிஸ் அதிகாரம் உட்பட அனைத்த அதிகாரங்களுடனும் நடைபெற்றால் மாத்திரமே இந்த நாடு முன்னேறும் இல்லாவிடின் தொடர்ச்சியாக வெடுக்குநாறி சம்பவம் போன்று பல சம்பவங்கள் நடைபெறும் ஈற்றிலே என்ன நடக்கும் என்பதை ஜனாதிபதி உட்பட அனைத்து தரப்பிற்கும் கடந்த காலம் உணர்த்தும் என்று கருத்த தெரிவித்தார்.