
ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல்
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலானது தம்பலகாமம் பிரதேச சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது.
இதனை அகம் மனிதாபிமான வளநிலையம் (AHRC ) ஏற்பாடு செய்திருந்ததுடன் 45 நாட்களுக்கு ஒரு முறை இக் கலந்துரையாடல் இடம் பெற்றுவருகிறது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியை உள்ளடக்கிய சிவில் சமூக உறுப்பினர்கள், இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள்,உள்ளூர் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிராமங்களில் காணப்படும் சமூக மட்ட பிரச்சினைகளை உள்ளூர் அதிகார சபைகள் ஊடாக மக்கள் பங்கேற்பின் மூலமான தீர்வுகளை பெற்றுக் கொண்டு சமூகத்தை விழிப்படையச் செய்வது தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது தம்பலகாமம் பிரதேச சபை மூலமாக ஜயபுர பகுதியில் கொட்டப்படும் கழிவு காரணமாக துர் நாற்றம் வீசுதல்,யானைகளின் நடமாட்டம் அதிகரிப்பு,அப்பகுதியில் கிரவல் அகழ்வு உள்ளிட்ட பிரச்சினைகளை ஊடகவியலாளர் ஒருவர் முன்வைத்து இதன் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச சபை செயலாளருக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.


