மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: 4 பேருக்கு கடும் நிபந்தனையுடன் பிணை

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் கல்முனை நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது .

குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இவர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிவான் மற்றுமொரு சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த சம்பவத்தில் கைதான 30,26, 22, 23, வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் நீண்ட சமரப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் சரீர பிணை, மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் பாரப்படுத்தல், குறித்த வழக்கு தவணைகளில் தவறாது ஆஜராகுதல், உள்ளிட்ட பிணை நிபந்தனை விதிக்கப்பட்டு மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 20 திகதி வரை வழக்கினை ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தியின் பின்னணி

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் மாணவன் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை மேலதிக பொலிஸார் அவ்விடத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார்.