கர்நாடகாவில் முக்கிய இடங்களுக்கு மிரட்டல்

பெங்களூர் கர்நாடகாவின் முக்கிய இடங்களில் உள்ள விடுதிகள் கோயில்கள் பேருந்துகளில் வரும் 9-ம் திகதி குண்டு வெடிக்கும் என்று மின்னஞ்சலில் மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பெங்களூரில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ என்ற பிரப‌ல ஹோட்டலில் கடந்த 1-ம் திகதி குண்டு வெடித்து இதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா, அமைச்சர்கள் பிரியாங்க் கார்கே, கே.ஜே.ஜார்ஜ் உள்ளிட்டோருக்கும் , கர்நாடக டிஜிபி, பெங்களூர் மாநகர பொலிஸ் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் நேற்று மின்னஞ்சலில் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

‘நீங்கள் இதுவரை டிரெய்லரைதான் பார்த்தீர்கள். வரும் 9-ம் திகதி பிற்பகல் 2.48 மணிக்கு கர்நாடகாவின் முக்கிய இடங்கள் குறிப்பாக பெங்களூரில் உள்ள ஹோட்டல்கள், கோயில்கள், வணிக வளாகங்கள், ரயில்கள், பேருந்துகள் ஆகியவற்றில் குண்டு வெடிக்கும். இதை நாங்கள் நிறுத்த வேண்டுமானால் எங்களுக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ.20 கோடி) தர‌ வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாகித் கான் என்ற பெயரில் இருந்து இந்த மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து பெங்களூர் சைபர் கிரைம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மின்னஞ்சலை அனுப்பியது யார்? எங்கிருந்து இது வந்துள்ளது? மின்னஞ்சல் அனுப்பப்பட்ட கணினியின் ஐபி முகவரி உள்ளிட்ட தகவல்களை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்