
மட்டக்களப்பில் நண்பனின் பிறந்த நாளை கொண்டாட சென்ற இளைஞன் உயிரிழப்பு
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
எருவில் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் ஜலனன் (வயது – 20) எனும் இளைஞரை குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நண்பரின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி விட்டு வந்து கொண்டிருக்கும் போது வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த புளியமரத்தில் மோதுண்டு இன்று அதிகாலை 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்ததுடன் இவர்கள் பலத்த காயங்களுடன் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் உயிரிழந்துள்ளதாகவும் மற்றைய இளைஞர் தற்போது மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



