இனி டார்லிங் என அழைத்தால் சிறை நிச்சயம்

அறிமுகமில்லாத பெண்ணை “டார்லிங்” என்று அழைப்பது பாலியல் துன்புறுத்தலாகக் கருதப்படும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

2015ஆம் ஆண்டில் அந்தமானில் உள்ள வெபி கிராமத்தில் பாதுகாப்பு பணிக்கு சென்ற பெண் காவலரை ஜனக் ராம் என்பவர் “டார்லிங் அபராதம் விதிக்க வந்தாயா?” என கேட்டதாக மாயபந்தர் பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டில் நீதித்துறை நீதவான் முன்பான விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட ஜனக் ராமிற்கு மூன்று மாத சிறைத்தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், வழக்கை நீதிபதி ஜெய் சென்குப்தா விசாரித்தார். சம்பவத்தின் போது ஜனக் ராம் குடிபோதையில் இருந்ததாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்ட நிலையில், பொலிஸ்துறையினரால் வழங்கப்பட்ட சாட்சியங்கள் போதுமானவை என நீதிபதி தெரிவித்தார்.

குடிபோதையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தெரியாத எந்த பெண்ணையும் ‘டார்லிங்’ என அழைக்க முடியாது என நீதிபதி கூறினார்.