தென் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி தென் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் ஒலுவில் வளாகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு இணங்க, நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் இருநாள் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2016ம் ஆண்டைய சம்பள சீர்திருத்தத்திற்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கு தருவதாக அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்டு இன்றுவரை வழங்கப்படாதுள்ள 15% சம்பள அதிகரிப்பை வழங்க கோரல், மாதாந்த இடர் கொடுப்பனவை அதிகரித்தல், பல்கலைக்கழக சேமலாப நிதியை வேறு தேவைகளுக்கு அரசாங்கம் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு வெளியிடல், அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஊதிய அதிகரிப்புச் செய்ய வலியுறுத்தல், பல்கலைக்கழகங்களில் காணப்படும் நீண்டகாலமாக காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்பி நிருவாக விடயங்களை சுமுகமாக முன்னெடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.