
சபாநாயகருக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை கைச்சாத்து
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி கைச்சாத்திட்டுள்ளது.
இந்த பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ளது.
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட விதம் மற்றும் அதனை சபாநாயகர் சான்றுரைப்படுத்திய விதம் என்பன தொடர்பிலேயே அவருக்கு எதிராக இந்த அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தின்போது, குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய வியாக்கியானங்கள் மற்றும் பரிந்துரைகளுக்கு மாறாக சட்டமூலத்தின் சில சரத்துக்கள் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தனர்.
எனினும், குறித்த ஆட்சேபனைகளை புறக்கணித்து சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சியினருக்கு இடமளித்தன் மூலம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசியலமைப்பை மீறியுள்ளதாக தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த அவநம்பிக்கை பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டுள்ளனர்.
இவர்களுடன் எம்.ஏ. சுமந்திரன், ஜி. எல். பீரிஸ், சந்திம வீரக்கொடி மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



