இந்தியாவுடன் இலங்கை ஏப்ரலில் ‘எட்கா’ உடன்படிக்கை

-கொழும்பு-

அண்மையில் தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்துகொண்ட கையோடு இலங்கை அரசாங்கம் இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை( எட்கா ) அடுத்த சில மாதங்களுக்குள் நிறைவுசெய்வதற்கு திட்டமிட்டிருக்கிறது.

அத்துடன் சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை குறித்து சில வட்டாரங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.சேவைகள் துறையை இந்தியாவுக்கு திறந்துவிட்டால் இந்திய தறைசார் அலுவலர்களின் வருகை பெருமளவில் அதிகரிக்கும் என்பதால் தங்களது தொழிலுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சம் இலங்கையின் துறைசார் நிபுணத்துவ பிரிவினர் மத்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு எட்கா தொடர்பிரான பேச்சுவார்த்தைகளை இலங்கை இந்தியாவுடன் கடந்த வருடம் மீண்டும் தொடங்கியது.13 வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் ஜனவரியில் இடம்பெற்றன.

அமைச்சரவையின் அனுமதிக்கு பிறகு சாத்தியமானளவு விரைவாக உடன்படிக்கையை கைச்சாத்திடக்கூடியதாக பேச்சுவார்த்தைகளை ஏப்ரில் இறுதியளவில் பூர்த்திசெய்யும் நோக்குடன் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை மார்ச் 10 — 13 க்க்குள் நிறைவுசெய்யப்படும் என்று கூறப்படுகிறது.

சேவைகள் துறையைப் பற்றி கேட்டபோது அந்து துறைகளுக்கு இலங்கையை திறந்துவிடுமாறு இந்தியா கேட்டதாகவும் ஆனால் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளைப் பொறுத்தவரை அவ்வாறு செய்யமுடியாது என்று அரசாங்கம் மறுத்துவிட்டதாகவும் நம்பகமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி டெயிலி மிறர் பத்திரிகை கூறியது.

இலங்கையின் துறைசார் நிபுணர்களின் அச்சத்தைப் போக்கும் ஒரு முயற்சியாக அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் போன்ற அமைப்புகளுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.