
மட்டு காத்தான்குடி அஷ் ஷூஹதா வித்தியாலயத்தின் நாற்பெரும் விழாக்கள்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி அஸ்ஷூஹதா வித்தியாலயத்தின் நாற்பெரும் விழா நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா ஜுலேக்கா முரளிதரனின் பங்குபற்றுதலுடன் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர். எம்.சீ.எம். முனீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு கடந்த 2023ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் தகைமை பெற்ற மற்றும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை கௌரவித்தல், தரம் 5 மாணவர்களின் பிரியாவிடை, உதயதாரகை, ஷூஹதா சஞ்சிகை வெளியீடு மற்றும் கிட்டி சின்னம் சூட்டும் நிகழ்வு என நாற்பெரும் விழாக்களாக கொண்டாடப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கௌரவத்தினை வழங்கி வைத்தார்.
இதன்போது கலை நிகழ்வுகளான அறபு ஹஸீதா, நாட்டார் பாடல், நடனம் என பல நிகழ்ச்சிகளை மாணவர்கள் மேடையில் அரங்கேற்றினர்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ.எம். ஹக்கீம், சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் அமைப்பின் மாவட்ட தலைவர் தேசபந்து அல்ஹாஜ் ஏ.எல்.எம். மீராசாஹிபு, சென்ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் அமைப்பின் மாவட்ட ஆணையாளரும் பயிற்றுவிப்பாளருமான எஸ்.எல்.எச்.எம். இனாமுல்லா, ஓய்வு பெற்ற காத்தான்குடி பிரதேச கல்விப் அதிகார எம்.ஏ.சீ.எம். பதுறுதீன், காத்தான்குடி ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம். றிஸ்வி ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் மேலும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


