ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு முயற்சியின் பின்ணியில் சந்திரிகா

 

-கொழும்பு-

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு தற்போது முன்னெடுக்கப்படுவதாகக் கூறப்படும் முயற்சியின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆனால், அத்தகைய ஒரு முயற்சிக்கு தற்போதைய பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதில் உள்ள பிரச்சினை காரணமாக அந்த முயற்சி வெற்றியளிக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துவிட்டு பாராளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் அதிகாரங்களை மாற்றுவதற்கு தற்போதைய அரசியலமைப்புக்கு புதிய திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முன்னாள் சபாநாயகரும் சமூகநீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான கரு ஜெயசூரியவுடன் சேர்ந்து திருமதி குமாரதுங்க சில அரசாங்க சார்பற்ற தன்னார்வ நிறுவனங்களையும் சிவில் சமூக அமைப்புக்களையும் அணுகியிருப்பதாகத் தெரியவருகிறது.

அரசியலமைப்பு மாற்றங்கள் என்ற போர்வையில் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஒரு முயற்சியாகவே இது பரவலாக நோக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக முதன்முதலாக 1994 ஆண்டு தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டபோது திருமதி குமாரதுங்கவே நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார். அதற்கு பிறகு வேறு தலைவர்களும் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக தேர்தல்களில் வாக்குறுதி அளித்தபோதிலும், அதிகாரத்துக்கு வந்த பிறகு அதைக் காப்பாற்றவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவும் இப்போது ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பை ஆதரிக்கிறார்கள்.

ஆனால் தேசிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் அவசரமாக அந்த ஆட்சிமுறை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் கடுமையாக எதிர்க்கின்றன.

” தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு இது இன்னொரு ஏமாற்று வேலை என்று கூறியிருக்கும் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஜனாதிபதி தேர்தலில் தாங்கள் வெற்றிபெற்ற பிறகு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாகவும் தற்போதைய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவது நடைமுைறையில் சாத்தியமில்லை என்று குறிப்பிட்டிருக்கிற்ர்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி அடுத்த தேசிய தேர்தல்களுக்கு பிறகு மக்கள் ஆணையுடன் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுவதே உகந்தது என்று கூறுகிறது.