
மூவர் தொடர்பான தகவலை வழங்குமாறு பொலிசார் பொது மக்களிடம் வேண்டுகோள்
பெலியத்தவில் கடந்த ஜனவரி 22ஆம் திகதி 5 பேர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் அம்பலாங்கொடை, கஹாவ, வாரகொட பகுதியைச் சேர்ந்த 35 வயதான ‘சூட்டிய’ என அழைக்கப்படும் மஹகமகே தினேஷ் பிரியங்கர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மற்றுமொரு சந்தேகநபர் அங்குருவெல்ல யாய 4 தம்புத்தேகம மற்றும் கல்பத்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நிஷாந்த சமன் குமார டயஸ் எனவும், மூன்றாவது சந்தேகநபர் 41 வயதான ரன்முனி மகேஷ் ஹேமந்த சில்வா, உரகஹா மாகந்தானை, புவக்கஹவத்தையைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர்களின் இருப்பிடம் குறித்து தகவல் அறிந்தவர்கள் தங்காலை பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் 071-8591488 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது பெலியத்தவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 071-859497 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அபே ஜன பல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
