சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞன்

இந்தியாவின் திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்கச் சென்ற இளைஞரை சிங்கம் கடித்து கொன்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பூங்காவில் சிங்கங்கள் இருக்கும் பகுதியில் இளைஞர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி குதித்து உள்ளே சென்று அங்கிருந்த சிங்கத்துடன் செல்பி எடுப்பதற்காக, அதன் அருகே சென்றதாக கூறப்படுகிறது.

இந் நிலையில் அங்கிருந்த சிங்கம் அவர் மீது பாய்ந்து கடித்துக் குதறிய போது அந்த இளைஞர் கூச்சலிட்டுள்ளார். இதனை கண்ட அங்கிருந்த பணியாளர்கள், அவரை ஓடி வருமாறு அழைத்தனர். அதற்குள் அந்த சிங்கம் அந்த இளைஞரின் கழுத்தைப் பிடித்து கடித்துக் கொடூரமாக கொன்றுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார், அந்த இளைஞரின் சடலத்தை மீட்டு, உயிரியல் பூங்கா ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன் சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.