“இதுபோன்ற நூல்கள் இனி வேண்டாம்” ஊடகவியலாளர் இரா.துரைரட்ணத்தின் வெளியீட்டு விழாவில் -கல்லாறு சதீஷ் –

“கடந்த காலத் தவறுகள் எதிர்காலத் தவறுகளைத் தவிர்ப்பதற்குப் பாடமாகட்டும்”,தவறுதலாகத் தவறு செய்தவர்கள் கூட தங்களை மாற்றிக்கொண்டு மகாத்மாக்களாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

எனவே இது போன்ற நூல்கள் இனி வேண்டாம், இது போன்ற நூல்கள் இனித் தோற்றம் பெறாத அளவிற்கு உலகம் அன்பாலும் அமைதியாலும் நிறைய வேண்டும் என எழுத்தாளர், கலாநிதி கல்லாறு சதீஷ் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் இரா.துரைரட்ணம் “கிழக்கில் சிவந்த சுவடுகள்” எனும் நூலின் அறிமுகவிழா அண்மையில் சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் இடம்பெற்ற போது இதில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கிய போதே மேற்கண்டவாறு கல்லாறு சதீஷ் தெரிவித்தார்.

இங்கு இவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது.

நூல் வெளியீட்டு விழாவுக்கு வரும்வரை எனக்கு நூல் கிடைத்திருக்கவில்லை,அதனால் அதனை நான் வாசிக்கவும் இல்லை.

ஒரு நோக்கத்துக்காகக் கடந்த காலம் வன்முறைகளால் ஈழபூமி சிவந்தது, தற்போது அவை நீங்கிச் சமூக நீரோட்டம் தெளிந்த நீரோடையாக இருக்கிறது. அவ்வப்போது சிறு கலங்கம் வந்தாலும் மீண்டும் தெளிகிறது இந்த அமைதி தொடர வேண்டும்.

நீதி,அமைதி,அன்பு எனும் பாதையில் ஒரு மலர்த்தோட்டம் தோற்றம் பெறட்டும், உலகம் இன்று எஐ (AI) வரை கண்டுபிடித்து விட்டது, இன்னும் கண்டுபிடிக்காத பெரும் விடை என்ஐ(NI) தான். எஐ-செயற்கை நுண்ணறிவு ,என்ஐ-இயற்கை நுண்ணறிவு. இயற்கை நுண்ணறிவு மனித குலத்திடம் தோற்றம் பெற்றால் பாதங்கள் செல்லும் பாதைகள் எங்கும் றோசா மலர்களே தூவப்பட்டிருக்கும்.

44 ஆண்டுகள் ஊடகவியலாளராக செயற்பட்ட இரா.துரைரட்ணம் அவர்களை ஒரு “வாழ்நாள் சாதனையாளர்” என தனது சிறப்புரையில் தெரிவித்தார்.

நூல் அறிமுக விழாவுக்கு ஊடகவியலாளர் தந்தியன் வேதநாயகம் தலைமை தாங்க,சுவிஸ் அரசியலாளர் ஶ்ரீ இராசமாணிக்கம் பிரதம விருந்தினராக வருகை தந்திருந்தார். மண்டபம் நிறைந்த மக்களுடன் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வெளியீட்டுரை மோகன் பரனும் , நூல்விமர்சன உரையை சிறப்பாகவும் ,ஆழமாக அசோக் லூயிஸ்சும், வரவேற்புரையை முனைப்பின் பொருளாளர் பாலாவும் வழங்கியிருந்தார்கள்.