
இலங்கையில் தேடப்படும் 42 குற்றவாளிக்கு சிவப்பு அறிக்கை
இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற தேடப்படும் குற்றவாளிகள் 42 பேருக்கு சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் புதிய பொலிஸ் சோதனைச் சாவடியை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பதில் பொலிஸ் மா அதிபர் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
மேலும் சந்தேகநபர்கள் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தேடப்பட்டு வருவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் தெரிவித்தார். தேடப்படும் குற்றவாளிகளை நாட்டுக்கு அழைத்துவர இன்டபோல் உதவி பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சட்ட அமலாக்க அதிகாரிகள் தேடப்படும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாதாள உலகக் குழு உறுப்பினர் சலிந்து மல்ஷிகாவின் முக்கிய உறுப்பினரான ‘குடு சலிந்து’ இன்று வியாழக்கிழமை காலை டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
