
இலங்கை தமிழரசி கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இடைக்கால தடை உத்தரவு
இலங்கை தமிழரசி கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த கூடாது என திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை இடைக்கால தடை உத்தரவை விதித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு அமுல்படுத்தும் வகையில் மேற்கு குறித்த இடைக்கால தடை கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் மனுதாரரின் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவக்குமாருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் மற்றும் சட்டத்தரணி புரந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
கடந்த 21ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெற்ற பொதுச் சபை கூட்டங்கள் சட்டத்துக்கு முரணானதும், செல்லுபடியற்றதும் எனவும், எனவே குறித்த இரண்டு பொதுச் சபை கூட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகள் சட்டத்திற்கு முரணானதும் செல்லுபடியற்றது எனவும் வாதம் இன்று முன்வைக்கப்பட்டது.
தமிழரசு கட்சியின் அமைப்பு விதி அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச் சபை கூட்டங்களில் பங்குபற்றி குறித்த தெரிவுகளின் போது வாக்களித்துள்ளமையினால் குறித்த கூட்டம் சட்டமுரணானது எனவும் இன்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து குறித்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த மாநாட்டிற்கு திருகோணமலையில் மாவட்ட நீதிமன்றம் இரு வாரங்களுக்கு இடைக்காலை தடை உத்தரவு விதித்துள்ளது.
இந்த வழக்கில் மாவை சேனாதிராஜா, எஸ். சிறிதரன், எம்.சுமந்திரன், ச.குகதாசன் உட்பட தமிழரசு கட்சியின் ஏழு முக்கியஸ்தர்கள் எதிர் மனுதாரர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கினை திருகோணமலை சாம்பல்தீவு – கோணேஷபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார் ஊடாக இவ் வழக்கினை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
