இலங்கை முப்படைகளும் ஆட்சேர்ப்பை நிறுத்தம்

-கொழும்பு-

இலங்கை இராணுவத்தில் உள்ள படைவீரர்களின் எண்ணிக்கையை இவ்வருட இறுதியளவில் 135,000 ஆகக் குறைக்கும் நடவடிக்கைகளில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. இறுதியாக இருந்த எண்ணிக்கையான 200,783 இல் இருந்து ஏற்கெனவே சுமார் 150,000 க்கு அது வீழ்ச்சிகண்டு விட்டது என்று கொழும்பு ஊடகம் ஒன்று கூறுகிறது.

இராணுவத்துக்கான செலவினங்களை மறசீரமைக்கும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை இவ்வருட இறுதியளவில் மூன்றில் ஒன்றால் குறைத்து 135,000 ஆக்குவதாகவும் 2030 ஆம் ஆண்டளவில் 100,000 ஆக்கப்போவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார கடந்த வருடம் கூறியிருந்தார்.

தொழில்நுட்ப ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் மிகவும் ஆற்றல் வாய்ந்ததும் சமநிலையானதுமான பாதுகாப்பு படையை உருவாக்குவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இலங்கை விமானப்படையின் எண்ணிக்கையையும் கடற்படையின் எண்ணிக்கயையும் தலா 35,000 ஆகப் பேணுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் படைத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இராணுவம் பொது ஆட்சேர்ப்பை நிறுத்திவிட்டதாகவும் தற்போது அத்தியாவசியமான பிரிவுகளுக்கு மாத்திரமே பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் ஆட்சேர்ப்பு இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறின. இதனால் ஒரு சில மாதங்களக்குள் இராணுவத்தின் எண்ணிக்கை 35 ஆயிரத்தால் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதேவேளை, இலங்கை விமானப்படையின் தற்போதைய பௌதீக பலம் 30 ஆயிரத்துக்கும் குறைவாக வந்துவிட்டதாக அதன் பேச்சாளரான குரூப் காப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.

விமானப்படையில் சுமார் 35,000 பேர் இருந்தனர். இப்போது அது 27 ஆயிரமாக குறைந்துவிட்டது.பல செயற்திட்டங்களுக்காக தொண்டர் அடிப்படையில் 2000 பேரை சேர்த்திருப்பதாகவும் அவர்களும் மேற்கூறப்பட்ட எண்ணிக்கைக்குள்ளேயே அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முற்றுமுழுதாக ஆட்திரட்டலை நாம் நிறுத்திவிடவில்லை. குறைத்திருக்கிறோம். எமது சேவைகளை பேணுவதற்கு ஆட்திரட்டல்கைளை செய்யவேண்டிய தேவை வரும்போது பாதுகாப்பு அமைச்சினதும் திறைசரியினதும் அங்கீகாரத்துடன் அதைச் ஙெய்கிறோம் என்றும் குரூப் காப்டன் கூறினார்.

அதேவேளை, இலங்கை கடற்படையின் தற்போதைய பௌதீக பலம் 40,000 என்று கூறிய அதன் பேச்சாளர் காப்டன் கயான் விக்கிரமசிங்க ” ஆட்திரட்டலை நாம் தொடருகிறோம். அவ்வாறு செய்யாமல் எமது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.ஓய்வுபெறுவோரின் எண்ணிக்கைக்கும் புதிதாக சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் இருக்கிறது. அதன் பிரகாரம் இலக்கம் குறையும்” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது அடிக்கடி சுகாதாரத்துறை, துறைமுகம் மற்றும் மின்சாரத்துறை உட்பட பல்துறைகளில் வேலைநிறுத்தங்கள் இடம்பெறுகின்றன. அவ்வாறு வேலைநிறுத்தம் இடம்பெறும்போது அந்தந்த துறைகளில் சுமுகமான சேவைகளை உறுதிசெய்கொள்வதற்கு முப்படைகளையும் பயன்படுத்தவேண்டியிருக்கிறது.

அண்மைய நாட்களாக சுகாதாரத்துறை வேலை நிறுத்தம் காரணமாக சேவைகளைப் பேணுவதில் மருத்துவ அதிகாராகளுக்கு உதவுவதற்கு வைத்தியசாலைகளில் ஆயிரத்துக்கும் அதிகமான படைவீரர்களை கடமையில் ஈடுபடுத்தவேண்டியிருக்கிறது.

ஆனால் இலங்கை இராணுவத்தை 2030 ஆம் ஆண்டளவில் பெருமளவுக்கு குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் திட்டங்களும் தொடருகின்றன. அத்தகைய சூழ்நிலையில் முப்படையினரும் அவர்களின் கிரமமான கடமைகளையும் செய்துகொண்டுபல்வேறு பணிகளில் அவர்களை ஈடுபடுத்துவது சிரமமாகப் போகலாம் என்று பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.