
சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்தியவர் கைது
சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் சேறும் பூசம் வகையில் இந்த அவதூறு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் அந்த அரசியல்வாதியின் பெயரை வௌிப்படுத்துவேன் என பாணந்துறையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
“சிஐடியினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கையில் 400,000 ரூபா பணம் இருந்தது. சமூக வலைதளத்தை பயன்படுத்தி எங்களை அவதூறாக பேசுபவர். அரசியல்வாதி ஒருவர் தான் பணத்தை கொடுத்துள்ளார்.
அவர் காரில் கொழும்பு சென்று டொலர்களை ரூபாயாக மாற்றிய போதே கைது செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் எங்களை, அரசாங்கத்தை, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அனைவர் தொடர்பிலும் அவதூறு பரப்புகின்றனர். அதனால் தான் இந்த ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
அரசாங்கங்களை கவிழ்க்க வேண்டுமானாலும் இந்த சமூக ஊடகங்கள் ஊடாக சேறு பூசுகின்றன. இந்த சட்டம், சமூக ஊடகங்களை தவறாக கையாளுபவர்கள் மட்டுமே பிரச்சினையாக அமையும்” என்றார்.
