
மட்டக்களப்பில் சண் தவராஜாவின் “கொரானாவுடன் வாழ்தல்” நூல் வெளியீடு
சண் தவராஜாவின் நூல்களில் மனுசி மற்றும் காணாமல் போனவர்கள் என்ற நூல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருக்கின்றது. இதில் முக்கியமாக காணாமல் போனவர்கள் என்ற நூலிலே இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களை அவர் எழுத்துக்கள் மூலம் வெளியில் கொண்டு வந்துள்ளார் என பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்தார்.
கொரோனா காலகட்டத்தில் பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளை தொகுத்து இன்று ஞாயிற்று கிழமை காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் சண் தவராஜாவினால் எழுதப்பட்ட நூல் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்த கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மௌனகுரு இவ்வாறு தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்
மேற்கு உலக மற்றும் சீனா போன்ற சோசலிச நாடுகள் வீழ்ச்சியடைகின்றபோது அவர்களுடைய பொருளாதாரத்தை சரி செய்வதற்கு சில யுக்திகளை அவர்கள் பயன்படுத்துவார்கள். சில வித்தியாசமான முறைகளையும் கையாள்வார்கள் அதில் ஒன்று தான் கொரோனா என்கின்ற ஒரு கருத்தும் உண்டு என அவர் தெரிவித்தார்.
சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி (மட்டக்களப்பு தமிழ் சங்கம் தலைவர்) தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பேராசிரியர் வ.கனகசிங்கம் (உபவேந்தர் – கிழக்கு பல்கலைகழகம்), சிறப்பு விருந்தினர்களாக இரா.நெடுஞ்செழியன்(பணிப்பாளர் – சுகாதார அமைச்சு – கிழக்கு மாகாணம்), ச.நவநீதன்(பணிப்பாளர் – கலாசார திணைக்களம், கிழக்க மாகாணம்), கா.சித்திரவேல் (பிரதேச செயலாளர் – கோறளைபற்று தெற்கு (கிரான்) என்போர் கலந்து கொண்டனர்.
நூல்வெளியீட்டின் முதவாவது பிரதியை தேசபந்து மா.செல்வராஜா பெற்றுகொண்டதுடன் வைத்திய கலாநிதி கே.அருளானந்தம் நூலினை அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும் இதன்போது நூல் ஏற்பு உரையினை சூம் தொழில் நுட்பத்தினுடாக சண். தவராஜா வழங்கியதுடன் இந்த நிகழ்விற்கு வருகை தந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.







