
தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்: தவராசா துசாந்
-யாழ் நிருபர்-
கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின் இடமாற்றமானது வேதனையளிப்பதாக வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தின் தலைவர் தவராசா துசாந் தெரிவித்தார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இருந்த போதிலும் கோரிக்கைக்கு இணங்க இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டி, 04.01.2024 தொடக்கம் 10.01.2024 வரை யான ஏழு நாட்களும், 17.01.2024 தொடக்கம் 30.01.2024 வரையான 14 நாட்களும் கால அவகாசம் வழங்கி எமது இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்து மாறு பிரதிப்பிரதம செயலாளரிடம் கடிதம் மூலம் கேட்டிருந்தோம்.
குறித்த காலப்பகுதிக்குள் இடமாற்றம் நடைமுறைக்கு வராதவிடத்து 05.02.2024 தொடக்கம் 10.02.2024 வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில்
ஈடுபடவுள்ளோம்.
நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அரச சேவையில் 5 வருடங்களுக்கு ஒருமுறை அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்குவதன் ஊடாக நாட்டில் இலஞ்சம், ஊழல் அற்ற வினைத்திறனான நிர்வாகத்தினை கட்டமைக்க முடியுமென்று உறுதிபடக் கூறியுள்ள போதிலும் சில பொறுப்பற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக இடமாற்றம் நிறுத்தப்படுவது கவலையளிக்கின்றது.
எனவே எமது இடமாற்ற உரிமையினையும் தாபன விதிக்கோவையினையும் நடைமுறை படுத்தவலியுறுத்தியே இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம்.
குறித்த விடயம் தொடர்பான போராட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணியளவில் ஆளுனர் செயலகத்திற்கு அருகாமையில் ஆரம்பக்கப்பட்டு, பேரணியாக சென்று மகஜர் கையளிப்பதுடன் தொடர்ந்து பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மகஜர் கையளிப்பு இடம்பெறும். அத்தோடு 10.02.2024 வரை தொடர்ச்சி யான தொழிற் சங்க போராட்டம் இடம்பெறும் என்பதனை அறியத்தருவதோடு அனைவரினதும் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம் – என்றார்.
