
-பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட-
ஜனநாயகத்துக்கு விரோதமான சட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு 200 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றமும் 50 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையும் அமைக்கப்படவேண்டும் என்று மூத்த அரசறிவியல் நிபுணரான பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அவரும் வேறு பல நிபுணர்களும் சேர்ந்து ‘ அரசியல் மற்றும் அரசியலமைப்பு மாற்றங்களின் ஊடாக ஜனநாயகத்துக்கான அடிப்படைக் கோட்பாடுகளும் முன்மொழிவுகளும் ‘ என்ற தலைப்பில் விரிவான ஆவணமொன்றை தயாரித்திருக்கிறார்கள்.
அது தொடர்பாக விளக்கம் அளித்த பேராசிரியர் உயன்கொட கூறியதாவது ;
பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை மீளாய்வு செய்வதற்கான அதிகாரம் 1972 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீதித்துைறைக்கு வழங்கப்படவில்லை. அடுத்தடுத்து தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றங்கள் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை நிறைவேற்றிவந்திருக்கின்றன.
செனட் சபை அமைக்கப்படவேண்டும் என்று தற்போது முன்வைக்கப்படும் யோசனை சோல்பரி அரசியலமைப்பினால் அமைக்கப்பட்ட செனட்டின் வழியில் அமைந்ததல்ல.
தெரிவுசெய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் மக்களின் இறைமை துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிரான ஒரு தடுப்பாக செயற்படக்கூடியதாக செனட் இருக்கவேண்டும் என்றே இப்போது யோசனை முன்வைக்கப்படுகிறது.
மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களினால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை முன்னெடுப்பதற்கு தடையாக செனட் இருந்ததாக அன்று நிலவிய ஒரு கருத்து காரணமாகவே 1972 ஆம் ஆண்டில் செனட் ஒழிக்கப்பட்டது.
செனட் ஒழிக்கப்படவேண்டும் என்ற கோராக்கை அன்று இடதுசாரிக கட்சிகளிடம் இருந்தும் மத்திய – இடது போக்குடைய கட்சிகளிடம் இருந்துமே வந்தது. அந்த நேரத்தில் இருந்த செனட் பிரிட்டனின் பிரபுக்கள் சபையை ஒத்ததாக இருந்ததாக அவர்கள் உணர்ந்தார்கள். இலங்கையின் சூழ்நிலைகளில் செனட் ஜனநாயக விரோதமானது என்று அவர்கள் நினைத்தார்கள். 1972 ஆம் ஆண்டில் நானும் அதை ஏற்றுக்கொண்டேன்.
ஆனால், இப்போது அந்தப் பின்புலம் பெருமளவுக்கு மாறிவிட்டது. கொடூரமான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றம் ஆளும் அரசியல் கட்சாகளினால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்படும் சட்டங்களைப் பாருங்கள்.சட்டங்களின் உள்டக்கங்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் வாசித்துக்கூட பார்ப்பதில்லை என்பது வெளிப்படையானது. இந்த சட்டங்களில்ாஎதுவுமே குடியரசுக் கோட்பாடுகளைப் பின்பறற்றுபவையாக இல்லை.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதைப் பற்றியே அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள். பார்ளுமன்றம் வெறுமனே ஒரு இறப்பர் முத்திரையாக செயற்படுவதாகவும் வரியிறுப்பாளர்களின் பணத்தில் பார்ளுமன்றத்தைப் பேணுவதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் மக்கள் நம்புகிறார்கள். இந்த நடைமுறைகளை கட்டு்படுத்துவதற்கான ஒரு வழியாகவே நாம் செனட் சபை அமைக்கப்படவேண்டும் என்று யோசனையை முன்வைக்கிறோம்.
பாராளுமன்றத்தின் மீதான நம்பிக்கை முன்னென்றும் இல்லாத அளவுக்கு தாழ்ந்த நிலையில் இருக்கிறது. பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்தக் கிராமங்களுக்கு கூட செல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள். பாராளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது.
இலங்கை அரசியல் சமுதாயத்தில் இன்று நிலவும் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு வெறுமனே அரசியலமைப்புக்கு மாற்றங்களைக் கொண்டுவருவது உதவப்போவதில்லை. அரசியல் முறைமையையும் மாற்றவேண்டியிருக்கிறது. தீர்மானங்களை எடுப்பதில் குறிப்பாக சமுதாயத்தின் அடிமட்டங்களில் பெரிய பாத்திரத்தை வகிப்பதற்கான வாய்ப்பை் மக்களுக்கு கொடுக்கவேண்டிய தேவை இருக்கிறது.
மக்கள் மத்தியில் காணப்படும் சீற்றத்தைை பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் எளிதாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடிய எவருக்கும் நாட்டில் யதார்த்த நிலை எந்தளவு நிலையுறுதியற்றதாக இருக்கிறது என்பது தெரியும்.
இலங்கையில் ஜனநாயகத்தை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் வேண்டிய தேவை இருக்கிறது. அமைச்சரவை 20 உறுப்பினர்களைக் கொண்டதாகவும் அவர்களில் ஐந்து பேர் பெண்களாக இருக்கவேண்டும் என்றும் நாம் யோசனை முன்வைக்கிறோம்.
உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கு என்று ஒரு கோட்டா இருக்கிறது. அந்த கோட்டா அரசாயல் கட்சிகளினால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.
உள்ளூராட்சி சபைகளின் பெண் உறுப்பினர்களில் பலர் அரசியல் தலைவர்களின் உறவினர்களாக அல்லது கூட்டாளிகளாக இருக்கிறார்கள்.
இது பல நாடுகள் எதிர்நோக்கும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது இந்தப் பிரச்சினையைக் கையாள சால கோட்பாடுகளை நாம் வகுக்கவேண்டியிருக்கிறது. இதற்கான திட்டவட்டமான பதில் என்னிடமில்லை.அதன் காரணத்தினால்தான் எமது யோசனைகளை மக்கள் முன்னிலையில் வைத்து அவர்களின் யோசனைகளை அறிய விரும்புகிறோம்.
மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதாக எதிர்கால அரசியலமைப்பு இருக்கவேண்டும். அண்மைய வருடங்களில் இந்த உரிமைகள் மக்களிடம் இருந்து எடுக்கப்பட்டுவிட்டன. ஆனால், பொருளாதார நீதிக்கு தாங்கள் உரித்துடையவர்கள் என்ற விழிப்புணர்வு மக்களிடம் வளர்ந்துவருகிறது.
நாம் எப்போதும் சிவில் உரிமைகளையும் அரசியல் உரிமைகளையும் பற்றியே பேசுகிறோம். பொருளாதார,சமூக மற்றும் கலாசார உரிமைகளையும் மக்கள் விரும்புகிறார்கள். இந்த உரிமைகளைப் பற்றி எமது அரசியலமைப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அடிப்படை உரிமைகள் தொடர்பான அத்தியாயத்தை தற்போதைய நிலைவரத்துக்கு ஏற்றமுறையில் புதுப்பிக்கவேண்டிய தேவை இருக்கிறது.
