
மட்டக்களப்பில் சிறிதரன்? சிறிநேசன் இல்லத்தில் இன்று சந்திப்பு?
தமிழரசுக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ள முரண்பாடுகளை தீர்த்து வைக்கும் நோக்கில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிறிதரனுக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனுக்கும் இடையில் சமரச பேச்சுவார்த்தைகள் இன்று புதன்கிழமை இரவு சிறிநேசனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்ப்பிற்கு எஸ்.சிறிதரன் எதிர்வரும் தினங்களில் விஜயம் செய்யவுள்ளதாக தமிழரசுகட்சி வட்டார தகவல்கள் தெரிவித்த நிலையில் இன்று இவர் விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக்கட்சியின் தலைவராக புதிதாக தெரிவு செய்யப்பட்ட சிறிதரன் மட்டக்களப்பு உறுப்பினர் ஒருவருக்கு செயலாளர் பதவியை வழங்குவதாக தெரிவித்துவிட்டு கொடுத்த வாக்கை மறந்து திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர் குகதாசனுக்கு செயலாளர் பதவியை வழங்கியுள்ளார் என்று ஒருசாரார் குற்றஞ்சாட்டி பல்வேறு அறிக்கைகளை ஊடகங்களுக்கு வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து மட்டக்களப்பில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் ஆகியோருக்கிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கருத்து முரண்பாட்டிற்குள்ளாகியுள்ள தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களை ஒன்றிணைக்க சமரச முயற்சியில் சிறிதரன் ஈடுபட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பின் போது எட்டப்பட்ட தீர்மானங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
