
கலாநிதி ஜெகான் பெரேரா
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவானமை மீண்டும் தமிழ்த் தேசியவாதத்தை முன்னரங்கத்துக்கு கொண்டுவரும் சாத்தியத்தைக் கொண்டிருக்கிறது.
பெரிய தமிழ்க்கட்சியான தமிழரசு கட்சி பல தமிழ்க்கட்சிகளின் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியாக விளங்கியது. விடுதலை புலிகளின் காலத்தின் கடைசிக்கட்டத்தில் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட அந்த கூட்டமைப்பு இப்போது சிதைந்துவிட்டது.
தமிழரசு கட்சியின் புதிய தலைவர் அதிகப் பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றிபெறவில்லை .தேசிய அரசியல் நீரோட்டத்தில் பெரும் பங்கு வகித்த அவரது போட்டியாளர் 43 சதவீதத்துக்கும் நெருக்கமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
பேச்சுவார்த்தை மற்றும் விட்டுக்கொடுப்பை அடிப்படையாகக் கொண்ட பாதை நிராகரிக்கப்படக்கூடாது என்ற விளக்கப்பாடு தமிழ்ச் சமூகத்திற்குள் இருப்பதை இது வெளிக்காட்டுகிறது.
விட்டுக்கொடுப்பற்ற பாதையில் சென்று தனித்தமிழ் நாடு என்ற குறிக்கோளில் இறுக்கமான பிடிவாதமாக இருந்த விடுதலை புலிகள் கண்ட் முற்றுமுழுதான இராணுவத் தோல்வி அந்தப் பாதை மீண்டும் பின்பற்றக்கூடியது அல்ல என்ற புரிதலை பலருக்கு ஏற்படுத்தியது.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சியின் தலைவரின் ஆரம்ப அறிவிப்புகள் தமிழ்த் தேசியவாதத்தின் அடிப்படையிலான ஒரு கடும் நிலைப்பாட்டை அவர் கொண்டிருப்பதை உணர்த்துகின்றன.
விடுதலை புலிகளின் தோற்றத்துக்கு முன்னரே இருந்து வந்த தமிழ்த் தேசியவாதம் அவர்களின் மறைவுக்கு பின்னரும் தொடருகிறது. அந்த தேசியவாதம் நிச்சயமாக ஒரு தனியான அரசாக அமையவேண்டும் என்றில்லை, சமஷ்டி முறை மற்றும் வேறுவகையான அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளுக்கு இசைவானதாகவும் இருக்கமுடியும்.
விடுதலை புலிகள் இயக்கப் போராளிகளின் மயானத்துக்கு சென்று மரியாதை செலுத்தியதே தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற உடனடியாக சிறிதரன் செய்த முதல் காரியமாகும்.
பிறகு அவர் வழங்கிய நேர்காணலில் ” விடுதலை புலிகளைப் பற்றி எம்மில் சிலருக்கு வேறுபட்ட அபிப்பிராயங்கள் அல்லது தவறான விளக்கப்பாடு இருக்கலாம். ஆனால் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள், ஏறத்தாழ 184 பேர் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் எனது கோட்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்பதே அதன் அர்த்தம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் கட்சியின் பெரிய பலமே தமிழ்த் தேசியவாதம்தான். மறைந்த ஈழ தேசிய விடுதலை போராளிகளின் கல்லறைகளில் இருந்தே அது தொடங்கவேண்டும் என்பதை அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள் ” என்று கூறினார்.
தேர்தலுக்கு பிறகு நிகழ்த்திய உரைகளில் சிறிதரன் எதிர்காலத்துக்கான தனது நோக்கு வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்த அலகின் அடிப்படையிலான சமஷ்டி முறையே என்று கூறனார். அத்துடன் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு போதுமானதல்ல என்ற நிலைப்பாட்டைக் கொண்டவராகவும் அவர் இருக்கிறார்.
இந்த உணர்வுகள் சிங்களப் பெரும்பான்மையினத்தவர்களுடன் முரண்பாட்டை தோற்றுவிக்கக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும் தமிழரசு கட்சியின் தலைவரின் நோக்கு மீது தமிழ் அரசியல் சமுதாயத்திற்குள் ஒரு கவர்ந்திழுப்பு இருக்கிறது.
தற்போதைய தலைமைத்துவம் உட்பட இலங்கை அரசினாலும் அதன் அரசியல் தலைவர்களினாலும் தாங்கள் அலட்சியப்படுத்தப்பட்டு ஒடுக்கப்படுவதாக தமிழ் மக்கள் மத்தியின் கடுமையான வேதனை உணர்வு இருக்கிறது.
அறகலய மக்கள் கிளர்ச்சியை அடுத்து எதிர்பாராத விதமாக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வந்தமை மாற்றத்துக்கான நம்பிக்கையை ஏற்டுத்தியது.
அரசியலில் இனவாதத்தை ஒருபோதும் பேசாத ஒரு அரசியல் தலைவர் என்ற வகையில் விக்கிரமசிங்க இலங்கையின் 75 வது சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வான்றைக் காணப்போவதாக செய்த அறிவிப்பு சாதகமான முறையில் நோக்கப்பட்டது. குறைந்த பட்சம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனாதிபதி செய்த அறிவிப்பு அக்கறையுடனானதாக தோன்றியது.
ஆட்சிமுறைப் பங்குதாரர்கள்
13 வது திருத்தம் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதில் இலங்கை அரசு செல்லக்கூடிய தூரத்தைப் பிரதிபலித்தது. இலங்கை அரசாங்க தலைவர்கள் நம்பிக்கை கொண்டிருந்த காரணத்தினால் அல்ல அந்த நேரத்தில் இந்தியா பிரயோகித்த கடுமையான நெருக்குதலே மாகாணசபைகள் உருவாக வழிவகுத்தது.
இந்தியாவைப் போலன்றி இலங்கையில் மாகாணசபை முறை அதன் முழுமையான ஆற்றலையும் எட்டவில்லை. இந்தியாவில் இதே முறை பெரியளவில் வெற்றிபெற்று வேற்றுமையில் ஒற்றுமைகொண்ட பெரிய பொருளாதார வல்லரசாக உலகில் அந்த நாட்டை விளங்க வைத்திருக்கிறது.
பொருளாதார செயற்திறனின் அடிப்படையிலேயே 13 வது திருத்தத்தை நியாயப்படுத்தவேண்டும் என்ற ஒரு பொதுவான தப்பபிப்பிராயம் இருக்கிறது. அதனால் மத்திய அரசாங்கத்திற்குள் இருக்கும் முன்னரங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் பன்முகப்படுத்தப்பட வேண்டும் அல்லது பிரதேச சபை, நகரசபை மற்றும் மாநகரசபை போன்ற சிறிய உள்ளூராட்சி சபைகளுக்கு அதிகாரம் பன்முகப்படுத்தப்படவேண்டும் என்று வாதிடப்படுகிறது. எவ்வாறெனினும் பொருளாதார செயற்திறனின்மையின் அடிப்படையில் மாகாணசபை முறையை இல்லாமல் செய்வதற்கான முயற்சி நியாயமான அடிப்படையைக் கொண்டதல்ல.
” 2023 ஆம் ஆண்டில் சகல மாகாணசபைகளுக்குமான மொத்த மீண்டுவரும் செலவினத் தேவை 485.25 பில்லியன் ரூபாவாக இருந்ததாகவும் 391.75 பில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகவும் ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரியும் ஜனாதிபதியினதும் பாதுகாப்பு அமைச்சினதும் முன்னாள் செயலாளருமான ஒஸ்ரின் பெர்னாண்டோ எழுதியிருக்கிறார்.
மொத்த மூலதனச் செலவினத்தேவை 167 பில்லியன் ரூபாவாக இருந்த வேளை 37 பில்லியன் ரூபா வழங்கப்பட்டது. மாகாணசபைகளின் மொத்த மூலதனச் செலவினத்தேவையில் 22.1 சதவீதத்தை உள்ளூராட்சி சபைகளுக்கு வழங்கினால் அவற்றை பொருளாதார ரீதியில் செயற்திறன் மிக்கவையாக மாற்றமுடியும் என்று கூறுவது அபத்தமாகும் என்று பெர்னாண்டா கூறியிருக்கிறார்.
இது இலங்கையில் அதிகாரம் ஏன் பரவலாக்கப்படவேண்டியிருக்கிறது என்ற அடிப்படைக் காரணத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. அதிகாரப் பரவலாக்கம் இல்லாத நிலையில் இன,மத சிறுபான்மைச் சமூகங்கள் நாட்டின் சகல பாகங்களிலும் பெரும்பான்மை இனத்தவர்களின் தயவில் வாழ்கிறார்கள்.
நிதிப் பரவலாக்கத்தை உள்ளடக்கியதாக அதிகாரம் பரவலாககம் செய்யப்பட்டால் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மைச் சமூகங்கள் தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பர். அவர்கள் நாட்டின் ஆட்சிமுறையில் பங்குதாரர்களாகவும் மாறுவார்கள்.
கடந்த ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலமாக முழு மாகாணசபை முறையும் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டிருப்பது தற்போதைய தருணத்தின் மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒரு அம்சமாகும்.
அரசியலமைப்புக்கு முரணாக 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்துவருவதற்கு அப்பால் அந்த திருத்தம் சட்டத்தில் இருக்கிறது என்பதை தவிர இன்று நடைமுறைப்படுத்தப்படுவதாக இல்லை.
மாகாணசபை தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் 13 வது திருத்தம் மாகாணசபைகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இன,மத சிறுபான்மைச் சமூகங்களுக்கான அதிகாரப்பரவலாக்கத்துடன் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத குறுகியதும் பக்கச் சார்பான அரசியல் நலன்களே இதற்கு காரணமாகும்.
2018 ஆம் ஆண்டில் பதவியில் இருந்த அரசாங்கம் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று உணர்ந்ததால் எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்கத் தீர்மானித்தது. தேர்தல்கள் நடத்தப்பட்டிருந்தால் மக்களின் ஜனநாயக ஆணையைத் தக்கவைப்பதில் அரசாங்கத்துக்கு இருந்த பலவீனம் அம்பலத்துக்கு வந்திருக்கும்.
அதேபோன்ற சூழ்நிலை தற்போதும் நிலவுகிறது. தற்போதைய அரசாங்கம் உள்ளூராட்சி தேர்தல்களை காலவரையறையின்றி ஒத்திவைக்கும் அளவுக்கு சென்றது.
நம்பிக்கை தரும் அறிகுறிகள்
இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், புதிதாக தெரிவுசெய்யப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் 13 வது திருத்தத்தை விடுத்து அதற்கு பதிலாக சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வொன்றைக் கோரியிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
ஆனால் தற்போதைய அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு தவறியதன் காரணத்தினால் மாத்திரம் தமிழ்த்தேசியவாதம் எழுச்சிபெற்றதாக கூறிவிடமுடியாது. ஆட்கள் காணாமல் போனமை, மனித உரிமைகளுக்கு விரோதமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் அபகரிக்கப்பட் நிலங்கள் அவற்றுக்கு உரித்துடைய தமிழ் மக்களுக்கு திருப்பிக் கையளிக்கப்படாமல் இருப்பது போன்ற மிகவும் உணர்ச்சிபூர்வமான விவகாரங்களை உரிய முறையில் அரசாங்கம் கையாளத்தவறியதும் அந்த எழுச்சிக்கு காரணமாகும்.
கிழக்கு மாகாணத்தில் பாரம்பரியமாக தமிழ்மக்கள் விவசாயம் செய்துவந்த நிலத்துக்கான அவர்களின் உரிமையைப் பாதுகாக்கவும் அரசாங்கம் தவறியிருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு — மாதவனையில் கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதாகவும் நிலம் உரித்துடையவர்களுககு திரும்பக்கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் உறுதிமொழிகளை வழங்கியபோதிலும், எதுவும் நடைபெறவில்லை.
ஆக்கிரமித்திருக்கும் நிலத்தில் இருந்து வெளியேறி சிங்கள விவசாயிகள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லவேண்டும் என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உட்பட நீதித்துறை தீர்ப்புக்களை வழங்கியபோதிலும் கூட எதுவும் நடைபெறவில்லை.
இத்தகைய நம்பிக்கை இல்லாத ஒரு சூழ்நிலையிலேயே சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் சவால்கள் தோன்றுகின்றன. இதைக் கையாளுவதற்கு அனுபவமும் விவேகமும் நிறைந்த அரசியல் தலைமைத்துவம் தேவை. ஆனால் அதற்கான நம்பிக்கை தரும் அறிகுறிகளை தென்படுகின்றன.
நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைப் பற்றி கவலைப்படாமல் தேர்தல்களில் வெற்றிபெற வாக்குகளைப் பெறும் நோக்குடன் தேசியவாதம் பயன்படுத்தப்படுகிறது என்ற பரந்தளவு விழிப்புணர்வு சிங்கள சனத்தொகையில் அரசியல் அக்கறையுடைய பிரிவுகள் மத்தியில் ஏற்பட்டிருப்பது அந்த அறிகுறிகளில் ஒன்று.
இலங்கையின் மிகுந்த தேசியவாத உணர்வுடைய அரசாங்க தலைவர்கள் குழுவொன்றின் ஆட்சிக்காலத்தில் சர்வதேச பொருளாதார வங்குரோத்து நிலை ஏற்பட்டது ஒன்றும் தற்செயலானது அல்ல.
அறகலய போராட்ட இயக்கத்தில் பங்கேற்ற பல்கலைக்கழக மாணவர்களும் இளைஞர்களும் இதை தெளிவாக விளங்கிக் கொண்டார்கள். அந்தப் போராட்டத்தில் அவர்கள் எழுப்பிய சுலோகங்கள் தாங்கள் மீண்டும் ஏமாறப்போவதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள் என்பதை வெளிபபடுத்தியது.
பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக சிங்கள பெரும்பான்மையினர் மத்தியில் குறுகிய இன அடிப்படையிலான தேசியவாதம் வீழ்ச்சி கண்டுவருகிறது என்பதற்கான உற்சாகம் தரும் அறிகுறிகள் இருக்கின்றன.
இனமோதல், இராணுவமயமாக்கல், தண்டனையின்மை, ஊழல் ஆகியவற்றுக்கும் பொருளாதார மற்றும் சமூக வீழ்ச்சிக்கும் இடையில் இருக்கும் தொடர்பை இப்போது மக்களால் பெருமளவுக்கு விளங்கிக்கொள்ள முடிகிறது. வளர்ந்துவரும் இந்த உணர்வு செல்வாக்குமிக்க பௌத்த மதகுருமார் மத்தியில் சமாதான இயக்கத்துக்கான ஆதரவுவளர வழிவகுத்திருக்கிறது.
முன்னணி பௌத்த பிக்குமார் குழுவொன்று புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் ஒரு பிரிவினருடன் சேர்ந்து முன்னெடுத்த முயற்சி இமாலயப் பிரகடனத்துக்கு வழிவகுத்தது. அந்த பிரகடனத்தை இரு தரப்பினரும் இணைந்து தயாரித்தார்கள்.
இந்த முயற்சியில் சம்பந்தப்பட்ட பௌத்த பிக்குகளில் இருவரான வண. பேராசிரியர் பள்ளேகந்த ரத்னசாரவும் வண. கலாநிதி மாதம்பகம அஸ்ஸஜியும் புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச பௌத்த மகாநாட்டில் தலைமைப் பதவிகளைப் பெற்றமைக்காக அண்மையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
அவர்கள் நிகழ்த்திய உரைகளில் தங்களது சமாதான முயற்சிக்கு பௌத்த மகாநாயக்கர்களின் ஆதரவு இருப்பதை உறுதிப்படுத்தினர்.
சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் திறக்கும் இந்த வாய்ப்புக்கள் ஊழலையும் அதிகார துஷ்பிரயோகத்தையும் ஒழித்துக்கட்டி சகலருக்கும் நல்வாழ்வைத் தரக்கூடிய மார்க்கத்தில் ஐக்கியப்படுத்தப்போகும் அனுபவமும் விவேகமும் கொண்ட அரசியல் தலைவர்களினால் அவதானிக்கப்படும்.

