காத்தான்குடியில் தொழில் வழிகாட்டல் பயிற்சி நிலையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது

நவீன சவால் மிக்க உலகத்திற்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தல், உயர் கல்வி வாய்ப்புக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்றவற்றை இலக்காகக் கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு தரம் 08 தொடக்கம் பட்டப்பின்படிப்பு வரையிலான 13 வயது முதல் 30 வயது வரையான இளைஞர் யுவதிகளை இலக்காகக் கொண்டு காத்தான்குடி றைஸ் சிறீலங்கா நிறுவனம் அதன் பங்காளர்களுடன் வேலைத்திட்டதினை உத்தியோக பூர்வமாக ஆரம்பிப்பதற்கான பரஸ்பர புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை (MOU) கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு காத்தான்குடி நகரசபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலியா விக்டோரியா பல்கலைக்கழகத்தின் வளவாளர் கலாநிதி அறூஸ் சரீப்தீன் மற்றும் காத்தான்குடி நகர சபையுடன் இவ் பரஸ்பர புரிந்துணர்வு உடன்படிக்கையின் றைஸ் சிறீலங்கா நிறுவனம் கைச்சாத்திட்டுக் கொண்டது.

றைஸ் சிறீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி நகரசபை செயலளார் ஏ.ஆர்.எப். றிப்கா ஷபீன் தலைமையில் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது றைஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவர் கே.எம்.எம். நவாஸ் மற்றும் அதன் பிரதிநிதிகள், காத்தான்குடி நகர சபை கணக்காளர் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.