தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 73 பேர் உயிரிழப்பு

மாலி நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் கடந்த செவ்வாய் கிழமை இரவு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்தனர்.

இந்நிலையில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்துக்குள் பணிபுரிந்த அனைவருமே மண்ணில் புதைந்துள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்த நாட்டு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 73-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டுள்ள நிலையில் அவர்களில் இதுவரை 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.