
ஒரே குடும்பத்தின் இரு வைத்திய நிபுணர்கள் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்களாகினர்
-காரைதீவு நிருபர் சிறிதரன் கஜானன்-
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் பிறந்த மண் காரைதீவில் ஒரே வீட்டில் இரு வைத்திய நிபுணர்கள் ,கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியர்கள் என்ற பெருமையை நிலைநாட்டியுள்ளனர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களும், கணவன் மனைவியுமான வைத்தியர் மார்க்கண்டு திருக்குமார் மற்றும் வைத்தியர் திருமதி விஜயகுமாரி திருக்குமார் ஆகிய இருவரும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகம்,லண்டன் றோயல் கல்லூரி என்பவற்றில் உயர் பட்டம் பெற்றவரே திருமதி விஜயகுமாரி திருக்குமார். MBBS,DCH,MD FRCPCH என பல பட்டங்களை தன்னகத்தே கொண்ட விஜயகுமாரி தற்போது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட பேராசிரியரும், மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் சிறுபிள்ளை வைத்திய நிபுணரும் ஆவார்.
மார்க்கண்டு திருக்குமார் யாழ் உரும்புராயை சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழகம்,கொழும்பு பல்கலைக்கழகம் என பட்டம்பெற்று நெதர்லாந்து தேசிய வைத்தியசாலையில் பட்ட மேற்படிப்பிற்கான பயிற்சியைப் பெற்றவர்.MBBS,MD,FSLCOG போன்ற பட்டங்களை தன்னகத்தே கொண்டவர்.
திருக்குமார் தற்போது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணரும் ஆவார்.
காதல் திருமணத்தால் இணைந்த வடக்கும் கிழக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள்.
சிறுபிள்ளை வைத்தியத்தில் முதலாவது பேராசிரியர் திருமதி விஜயகுமாரி திருக்குமார் ஆவார்.


