
கணவரையும் மகனையும் விமானநிலையத்தில் வழியனுப்பிவிட்டு வந்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு
கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று புதன்கிழமை அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.
குறித்த பேருந்து வீதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த கயஸ் வாகனத்துடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது கயஸ் வாகனத்தில் பயணித்த பெண்ணொருவர் உயிரிழந்தார்.
இவர் கணவரையும் மகனையும் வெளிநாட்டிற்கு செல்ல விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
யாழ்ப்பாணம் பாசையூரை சேர்ந்த மார்க் வெஸ்லி அலன் கத்தரின் என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இதன்போது உயிரிழந்துள்ளதுடன், இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவர்களில் மாடுகள் கொண்டு வந்த நபா் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விபத்தில் 9 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், நான்கு மாடுகள் காயமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
