ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்தும் வகையில் விசேட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்

-ஏறாவூர் நிருபர் உமர் அறபாத்-

ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்தும் வகையில் விசேட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.

புதிய வடிகாண்களை அமைத்தல் , வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் போது வடிகாணுடன் இணைந்ததாக அவை அமைக்கப்படல் , ஏற்கனவே உள்ள அவசியமான பாலங்கள் மற்றும் வடிகான்களை புனரமைப்பு செய்து துரிதமாக நீர் வழிந்தோட கூடிய ஏற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லல், கடல் மற்றும் ஆற்றுடன் இணைக்கப்பட்டதாக இயற்கையான நீரோடை மற்றும் தோனாக்களை சீரமைப்பதும் , சட்ட விரோதமாக அடைக்கப்பட்டுள்ள நீர் வழிந்தோடும் பாதைகளை அடையாளம் கண்டு சீரமைத்தல் எனும் அடிப்படையில் குறித்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்ட பணியாக பிரதேச அபிவிருத்தி குழு தீர்மானத்தின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானாவின் தலைமையில் ஏறாவூர் புன்னைக்குடா , ஐயங்கேணி, மீராகேணி பகுதிகளில் தடைப்பட்டு கிடக்கும் நீரோடை பகுதிகளையும் , வடிகாண்களையும் கள விஜயம் செய்து சீரமைக்கும் மதிப்பீட்டு வேலைத்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி திணைக்களம் , பிரதேச செயலகம், நகர சபை , ஏறாவூர் பற்று பிரதேச சபை , ஏறாவூர் பொலிஸ் நிலையம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உட்பட பல்வேறு தரப்பினரின் பங்கேற்புடன் குறித்த கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் ரிஸ்வி, ஏறாவூர் நகர சபை செயலாளர் ஹமீம் , ஏறாவூர் பற்று பிரதேச சபையின் செயலாளர் பற்குணம் , ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் நளீம் , ஏறாவூர் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சஞ்சீவ மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் , பொறியியலாளர்கள் , தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் , கிராம சேவகர்கள் , அனர்த்த முகாமைத்துவ மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் , கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது அடையாளம் காணப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணி அனைத்து திணைக்கள பங்களிப்புடன் அடுத்த வாரம் முன்னெடுக்க பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், நாளைய தினமும் ஏறாவூர் நகர பகுதியில் குறித்த களப் பணி ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பித்தக்கது.