வவுனியா யுவதி மீது தாக்குதல் : இரு பெண்கள் கைது

வவுனியாவில் யுவதி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழிவு தண்ணீர் மற்றும் வெள்ள நீர் என்பன வாய்க்கால் ஊடாக செல்வது தொடர்பில் அப்பகுதியில் உள்ள இரு வீட்டாரிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தது.

குறித்த பகுதி வடிகாலமைப்பு சீரற்ற நிலையில் காணப்படுவதாலும், அனுமதியற்ற கட்டிடங்கள் காரணமாகவும் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு குறித்த வீட்டாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதும் பிரதேச சபையால் அவை தீர்த்து வைக்கப்படவில்லை.

இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கழிவு நீர் வீதி வாய்கால் ஊடாக இன்னுமொரு வீட்டை அண்மித்து சென்ற நிலையில், கழிவு நீரை வீதிக்கு விட்ட வீட்டாருடன் அயல் வீட்டில் வசிக்கும் யுவதி ஒருவர் முரண்பட்டுள்ளார்.

இதன்போது இரு பகுதியினருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், குறித்த யுவதி மீது இரு பெண்கள் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த 22 வயது யுவதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய தாக்குதல் மேற்கொண்டதாக 30 மற்றும் 25 வயதுடைய சகோதரிகளான இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.