
போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனைக்கெதிரான கையெழுத்து வேட்டை
-நிந்தவூர் நிருபர் யுசைல்-
நிந்தவூர் கடற்கரை பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலினைச் சூழவுள்ள பகுதியில் அண்மைக் காலமாக தான்டவமாடிக் கொன்டிருக்கும் போதைப் பொருள் விற்பனை தொடர்பாகவும், இதனால் இப்பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல், மீணவர்களின் மீன்பிடி உபகரணங்கள், பொது மக்களின் வீடுகளில் இரவு பகல் பாராது களவு ஏற்படுவதோடு, இளம் வயது விவாகரத்து அதிகரித்து அதிகமாக நிகழ்வதோடு, பாடசாலை மாணவர்கள் பலர் போதைப் பொருளிற்கு அடிமையாகி தங்களது சுய நினைவினை இழந்து வீதியோரங்களில் தவித்துக் கொண்டிருப்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
மேலும் இப் பிரதேசத்தில் உள்ள போதை வியாபாரிகளினை மையப்படுத்தி பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலினூடாக சென்ற காலங்களில் அதிகமான மார்க்க உபண்னியாசங்களும், குத்பாக்களும்இதப்லீக் ஜமாஅத்தினரின் அழைப்புப் பணியும் இரகசியமாகவும், பகிரங்கமாகவும் இடம் பெற்று வந்த நிலையில், தற்போதய இப் பிரதேச நிலை போதையின் உச்சத்தினால் மிகவும் மோசமடைந்து காணப் படுவதனால் இப் பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுக்கெதிராக இங்குள்ள ஏனைய ஆண்கள், பெண்கள், தாய்மார்கள் என அனைவரும் ஒன்றினைந்து களமிறங்கியுள்ளனர்.
குறிப்பாக தினமும் வெளியூர்களில் இருந்து பலர் இப்பள்ளிவாசலைச் சுற்றியுள்ள பிரதேசத்தினை குறி வைத்து சொகுசு வாகனங்களிலும் இரவு பகல் பாராது தினமும் இப் போதைத் தூளை கொள்வனவு செய்வதற்காக படையெடுத்துக் கொண்டிருப்பதாக இப் பிரதேசத்தில் உள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனால் இப்பிரதேசத்தில் முறையற்ற ஆண், பெண் தொடர்பும், இப் பிரதேச உள்ள ஏனைய மக்களுக்கும் போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கும் மத்தியில் பாரிய மோதல் ஏற்பட்டு வருவதனால் மஹல்லா வாசிகள் அனைவரும் இப்பிரதேசத்தில் இருந்து போதைப் பொருள் விற்பனை செய்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சென்ற காலங்களில் ஊரில் உள்ள பொறுப்பு வாய்ந்த பல தரப்பினருக்கும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளதோடு, இது வரையில் போதை வியாபாரிகளின் அடாவடித்தனம் ஓயாத காரணத்தினால் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசலினைச் சூழவுள்ள மக்கள் அனைவரும் ஒன்றினைந்து இதற்கெதிராக உடன் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாக சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் மக்களாகிய நாங்கள் ஒன்றினைந்து போராட வேண்டிய நிலை ஏற்படும் என எமக்கு நேரடியாகவும் எழுத்து மூலமும் பள்ளிவாசலிற்கு அறிவித்திருந்தனர்.
உடன் மக்களின் கோரிக்கையினை ஏற்ற நிருவாக சபையினர் இப் பள்ளிவாசலின் தலைவர் ஜனாப்.எம்.எம்.பஷீர் தலைமையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஒன்று கூடி அவசரமாக போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனைக் கெதிரான நடவடிக்கையினை மேற்கொள்வதாக தீர்மானித்தனர்.
இதனைத் தொடர்ந்து வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் பிர்தெளஸ் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகம் மற்றும் பொது மக்களின் வேண்டுகோளிற்கினங்க இப் பள்ளிவாசலின் பிரதம பேஷ் இமாம் அல் ஹாபிழ்.மெளலவி.ஏ.பீ.எம்.ஷிம்லி(நஹ்ழி) இப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் விற்பனை மற்றும் பாவனை தொடர்பாகவும் இதற்கெதிராக மக்கள் பூரன ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பகிரங்கமான முறையில் தெளிவு படுத்தியிருந்தார்.
அந்த வகையில் ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து பேசிய மெளலவி பேச்சினை செவிமடுத்த மக்கள் அனைவரும் இதற்கெதிராக ஒன்றினைந்து செயற் படுவதாகவும், எமது எதிர்கால இளம் தலைமுறையினரை பாதுகாப்பதற்கான முயர்ச்சியினை நாம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி தங்களது கையெழுத்தினை உரிய முறையில் வழங்கிச் சென்றனர்.
இறுதியாக இக் கடிதங்கள் அனைத்தும் ஆவணப் படுத்தப் பட்டு, உரிய முறையில் அனைத்து பொறுப்பு வாய்ந்த அரச, அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப் படும் என்பதை நிருவாக சபையினர் இன்று உறுதிப் படுத்தினர்.





