காதலிக்காக பெண் வேடமணிந்து பரீட்சை எழுத வந்த காதலன்

 

இளைஞரொருவர் தனது காதலிக்காக பெண் வேடமணிந்து பரீட்சை எழுத சென்ற சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியா பஞ்சாப் மாநிலத்தில் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கான பரீட்சை கடந்த 7ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது பரம்ஜித் கவுர் என்ற இளம்பெண் ஒருவரும் பரீட்சைக்கு தோற்ற வந்துள்ளார்.

கை நிறைய வளையல்கள், உதட்டில் லிப் ஸ்டிக், நெற்றியில் பெரிய பொட்டு என அந்த பெண் காட்சியளித்தார்.

தொடர்ந்து பரீட்சைக்கான சோதனைகள் நடைபெற்றுள்ளது.

அப்போது அவரிடம், அவரது வாக்காளர் அடையாள அட்டை, தேர்வு அனுமதி பத்திரம் உள்ளிட்டவை இருந்துள்ளன.

இவை அனைத்தையும் சரி பார்த்த பின் அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அவருக்கு அதிர்ச்சி தரும் விதமாக வேறு ஒரு சோதனையும் நடைபெற்றுள்ளது.

அதாவது, இந்த பரீட்சை அனைத்தும் மின்னணு முறைக்கு மாற்றப்பட்டிருந்ததால், தேர்வுக்கு தோற்றுபவர்கள் அனைவரும் தங்களது விரல் அடையாளத்தை வைக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் திகைத்துப் போன அவர்,  சற்று தடுமாறியுள்ளார்.

பின்னர் அதிகாரிகள் அவரை கட்டாயப்படுத்தி விரல் அடையாளத்தை வைக்க கூறியுள்ளனர்.

அப்போது அவரது ரேகை பதிவாகவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த பெண்ணை விசாரித்தனர்.

அப்போதுதான் அது பெண் இல்லை,  ஆண் என்று அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பொலிஸாருக்கு இது குறித்த தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் விசாரிக்கையில், இந்த ஆள் மாறாட்டத்தை தனது காதலிக்காக செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார்.

பஞ்சாபில் அமைந்துள்ள ஃபாசில்கா என்ற பகுதியை சேர்ந்த இந்த இளைஞரின் பெயர் அங்ரேஸ் சிங். இவரும் பரம்ஜித் கவுர் என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.

இதனால் இந்த தேர்வுக்கு தனது காதலிக்கு பதிலாக அங்ரேஸ் சிங், காதலி போல் தோற்றத்தை உருவாக்கி ஆள் மாறாட்டம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலி ஆவணங்களை தயாரித்து மோசடியாக தேர்வு எழுத முயன்றதாக அங்ரேஷ் சிங் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவரிடமும் அவரது காதலியிடமும் பொலிஜார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலி போல் வேடம் அணிந்து காதலியின் தேர்வை எழுத வந்த காதலனின் செயல் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.