
-கலாநிதி ஜெகான் பெரேரா-
மற்றையவர்களின் நல்வாழ்வு பற்றி அக்கறைகொள்வதும் பொது நன்மையை உறுதிசெய்வதுமே ஒழுக்க முறைைமை அல்லது நீதிநெறி எனப்படுகிறது. அதன் அடிப்படையில் அரசாங்கம் பணியாற்றவேண்டியது அவசியம்.” எம்மைப் போன்றே அயலவர்களையும் நேசிப்பது மனித சமூகத்தை ஒழுங்கமைக்கும் ஒரு உண்மையாகும். அது மாத்திரமே சமூக ஒழுக்க முறைமையில் சகல விவகாரங்களையும் தீர்மானிக்கும்” என்று தத்துவஞானி ஜோன் லொக் கூறினார்.
அரசாங்கம் பொது நன்மையின் அடிப்படையில் அல்ல, பொருளாதார வெற்றியின் அடிப்படையில் அதன் செயற்பாடுகளை நியாயப்படுத்துகிறது. அரசாங்கம் அதன் வருமான இலக்குகளை அடைவதில் காணும் வெற்றியை சர்வதேச நாணய நிதியம் பாராட்டியிருக்கிறது.
” நெருக்கடிக்கான காரணச்களைக் கையாளுவதற்கு தேவையான வருவாயை நீங்கள் சேகரிக்கிறீர்கள்.அது உண்மையில் நல்ல செய்தி ” என்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத் தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் புரூவர் குறிப்பிட்டார்.
சில தரப்பினரை குறிப்பாக நாட்டின் இன்றைய இடர்மிகு நிலைக்கு பொறுப்பானவர்களை தவிர்த்து பலருக்கு துயரைக் கொடுக்கக்கூடிய வழிமுறைகளில் அரசாங்கம் வருவாயை சேகரிப்பதே பிரச்சினையாகும்.
பிரதானமாக மக்கள் மீது வரிகளைச் சுமத்துவதன் அரசாங்கம் அதன் நிதிக் கடப்பாடுகளை நிறைவேற்றுகிறது. அந்த மக்களில் பலர் ( சனத்தொகையில் கால்வாசிக்கும் அதிகமானவர்கள் ) வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள். அவர்களில் குறிப்பாக தொலைதூர கிராமப்புறங்களில் வாழ்பவர்களின் பிள்ளைகள் கடுமையான மந்தபோசாக்கினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பல்வேறு வழிமுறைகளின் ஊடாக வரிவலை விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது.18 வயதுக்கு மேற்பட்ட சகலரும் வரி இலக்கம் ஒன்றுக்காக தங்களை பதிவுசெய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். வரியைச் செலுத்துவது குறித்து முன்னர் ஒருபோதும் சிந்திக்காத பஸ் சாரதிகள் போன்ற குறைந்த வருமானத்தைப் பெறுபவர்கள் கூட இந்த வரிவலைக்குள் அகப்படுகிறார்கள்.
தனிப்பட்ட வரிவீதங்கள் கணிசமான அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளன.உயர்ந்த வருமானம் பெறும் பிரிவினருக்கான வரி மட்டங்கள் இரண்டு மடங்காக, மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
மக்களில் சில பிரிவினருக்கு இந்த வரிகளைச் செலுத்துவது கட்டுப்படியாகும் என்கிற அதேவேளை அவர்களும் கூட தங்களது சேமிப்புகளில் இருந்து அல்லது வேறு செலவினங்களைக் குறைப்பதில் இருந்து கிடைக்கும் பணத்தைப் பயன்படுத்தியே வரிகளைச் செலுத்தவேண்டியிருக்கிறது.
பெறுமதிசேர் வரியின் (வற் ) மூலமாக முழு சனத்தொகையிடம் இருந்தும் பெருமளவு வரி வருவாயைப் பெறுவது சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை எட்டுவதில் அரசாங்கத்தின் சாதனையின் எதிர்மறையான பக்கமாகும்.வருமானத்தையும் கொள்வனவுச் சக்தியையும் பொருட்படுத்தாமல் மக்களில் சகல மட்டத்தினராலும் வற் வரி செலுத்தப்படவேண்டியதாக இருக்கிறது.
பணக்காரர்களை விடவும் வறியவர்களையே கடுமையாகப் பாதிப்பதனால் இந்த வற் வரி பிற்போக்கான ஒன்றாகும். கடந்த காலத்தில் வற் வரியில் இருந்து பல பொருட்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்ட அந்த வரி விற்பனை செய்யப்படும் சகல பொருட்களுக்கும் பிரயோகிக்கப்படுகிறது.ஏற்கெனவே பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கிய மக்களை இதற்குமேல் தாங்கமுடியாது என்ற நிலைக்கு இந்த வரி கொண்டுவந்திருக்கிறது.
ஆனால் இலாபமீட்டாத பெரிய வர்த்தக நிறுவனங்களின் பங்குதாரர்களும் ஊழியர்களும் இந்த வரியில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது வரிவிதிப்பில் உள்ள நேர்மையற்ற தன்மையாகும்.
சவாலுக்குள்ளாகும் யுக்திய
கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் விட்டுவைக்கப்படுகின்ற அதேவேளை படிநிலையில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் பிடிபடுகின்ற இதே போன்ற தோற்றப்பாட்டை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் போதைப்பொருளுக்கு எதிரான போரிலும் காணக்கூடியதாக இருக்கிறது.
போதைப்பொருள் கடத்தலையும் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் முறியடிக்கும் இலக்குடன் முன்னெடுக்கப்படும் ‘ யுக்திய ‘ ( நீதி ) நடவடிக்கையில் 2023 டிசம்பர் 17 தொடக்கம் டிசம்பர் 31 வரையான இரு வார காலப்பகுதியில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக ( தற்போது இந்த எண்ணிக்கை 30 ஆயிரத்தை அண்மிக்கிறது) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியிருக்கிறது.
போதைப்பொருள் கடத்தலையும் திட்டமிட்ட குற்றச்செயல்களையும் முறியடிக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை யுக்திய நடவடிக்கையின்போது சித்திரவதை,மனிதத்தன்மையற்ற முறையில் நடத்துதல், அடாத்தான கைதுகள் மற்றும் தடுத்துவைத்தல் தொடர்பில் பெருவாரியான முறைப்பாடடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு கூறுகிறது.
போதைப்பொருள் பிரச்சினை பல வருடங்களாக படுமோசமாகத் தீவிரமடைந்து வந்திருக்கிறது. இதை உலகில் காணப்படக்கூடியதாக இருக்கும் நிலைலரத்துடன் சமாந்தரமானதாக நோக்கவேண்டும்.
ஒரு இடைத்தரிப்பு நிலையமாக இலங்கை விளங்குவதே இந்த போதைப்பொருள் பிரச்சினை சிக்கலானதாக மாறியிருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாகும். தங்களது அரசியல் மற்றம் அதிகாரத் தொடர்புகளின் விளைவாக தண்டனையின்மையை அனுபவிக்கும் பேர்வழிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெரும் பணம் பண்ணுகிறார்கள்.
இன்று போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்ற வல்லமைகொண்ட பெரிய பணக்காரர்களைப் பொறுத்தவரை மிகவும் வறிய வாழ்க்கைப் பின்னணியில் இருந்து கோடீஸ்வரர்களான பல கதைகள் இருக்கின்றன.
போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிப்பதற்கான அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகள் தொடர்ந்து நிலைபேறானதாக இருக்குமா அல்லது முன்னாள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஒருவரினால் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருளுக்கு எதிரான போரைப் போன்று இருக்குமா என்பது முக்கியமான கேள்வி.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டார்கள் என்ற காரணத்துக்காக பிலிப்பைன்ஸில் ஆயிரக்கணக்கானவர்கள் வீதிகளில் ஈவிரக்கமற்ற முறையில் கொன்றுகுவிக்கப்பட்டார்கள். ஆனால் அந்த ஜனாதிபதி இப்போது பதவியில் இல்லை, ஆனால் போதைப்பொருள் பிரச்சினை தொடருகிறது.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை இப்போது சர்வதேச கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது. யுக்கிய நடவடிக்கையை மீளாய்வு செய்யுமாறும் சமூகத்தில் சட்டவிரோத போதைப்பாருள் பிரச்சினையைக் கையாளுவதில் சுகாதாரம் தொடர்பிலான உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்துமாறும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேர்க் அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டிருக்கிறார்.
” போதைப்பொருட்களைப் பயன்படுத்துபவர்கள் அவற்றுக்கு ஏன் அடிமையானார்கள் என்ற காரணங்களைக் கண்டறிந்து அவர்களை சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைப்பதற்கு அவசியமான ஆதரவை வழங்கி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தவேண்டும். போதைப்பொருள் பாவனையையும் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக போதைப்பொருளை வைத்திருப்பதையும் குற்றச்செயல் நீக்கம் செய்வது உட்பட பயனுறுதியுடைய போதைப்பொருள் கொள்கைகளை வகுக்கவேண்டும் என்று அரசாங்கங்களுக்கு அழைப்புவிடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் கடந்த வருடம் அறிக்கையொன்றை வெளியிட்டது” என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த சிந்தனையை அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை. ஆட்சிமுறையில் மனித உரிமைகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை தொடர்பில் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளையே மதிக்காமல் செயற்படும் ஒரு அரசாங்கத்திடம் இதை எதிர்பார்க்கமுடியுமா?
செங்கடல் நெருக்கடி
தேசியப் பிரச்சினைகள் தொடர்பிலான அரசாங்கத்தின் சிந்தனை அதன் சர்வதேச உறவுகளுக்கும் விரிவுபடுத்தப்படுகின்றது. தாக்குதல்களில் இருந்து சர்வதேச கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்கான கூட்டு சர்வதேச நடவடிக்கையின் அங்கமாக இலங்கை கடற்படையை செங்கடலுக்கு அனுப்பும் தீர்மானத்தை அரசாங்கம் இலங்கையின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்டது என்று கூறி நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறது.
அதிர்ஷ்டவசமாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த மத்திய கிழக்கு நாடுளின் தூதுவர்களிடமிருந்து வந்த ஆலோசனையும் நெருக்குதலும் பயன்தந்திருக்கிறது போன்று தெரிகிறது.
சர்வதேச சமூகத்தில் இலங்கையின் உண்மையான நிலை பற்றிய விழிப்புணர்வு இல்லாததாக அமைந்த முன்னைய அணுகுமுறையில் இருந்து ஜனாதிபதி பின்வாங்கியிருக்கிறார் போன்று தெரிகிறது.
காசாவில் உடனடி போர்நிறுத்தம் ஒன்று கடைப்பிடிக்கப்படவேண்டும் என்று இலங்கை விரும்புகிறது என்றும் மோதல்கள் முடிவுக்கு வந்தவுடன் காசாவுக்கு இலங்கை உதவிகளை அனுப்பும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
செங்கடலில் நிலவும் பிரச்சிகைளின் விளைவாக சர்வதேச கப்பல் நிறுவனங்கள் தாக்குதல் இடம்பெறக்கூடிய செங்கடலின் ஊடாக குறுக்கு வழியைப் பயன்படுத்துவதை தவிர்த்துஇப்போது கொழும்பு துறைமுகத்தைப் பயன்படுத்த விரும்புகின்றன.
செங்கடலின் ஊடாக செல்லும் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து அண்மைய நாட்களாக இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான முனையத்தினால் கையாளப்படும் கொள்கலன் தொகுதிகளின் அளவு சுமார் 80 சதவீத அதிகரிப்பைக் கண்டிருக்கிறது. அதனால் செங்கடலில் இராணுவ நடவடிக்கையில் சம்பந்தப்படுவதற்கு கூறப்படும் பொருளாதார நியாயப்பாட்டை புரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கிறது.
” செங்கடலுக்கு இலங்கை கடற்படையை அனுப்பினால் அதன்நடவடிக்கைகளுக்கும் பராமரிப்புக்கும் செலவு ஏற்படும். கடல் ரோந்துக் கப்பல் ஒன்றுக்கு மாத்திரம் ஒரு மாதத்துக்கு டீசல் செலவாக சுமார் 6 கோடி ரூபா தேவைப்படும். பாரிய செலவு ஏற்படும் .அதற்கு அரசாங்கம் தயாராக இருக்கவேண்டும் ” என்று ஓய்வுபெற்ற றியர் அட்மிரலும் நீரியல் நிபுணருமான வை.என். ஜயரத்ன கூறுகிறார்.
பெரிய வல்லரசுகள் மறைமுகமாக நடத்துகிற போர்கள் உலகப் பொருளாதாரத்தினதும் அப்பாவி மக்களினதும் நலன் கருதி நிறுத்தப்படவேண்டும். பெரும் எண்ணிக்கையான குடிமக்களின் இழப்புகளுடன் நீண்டுகொண்டுபோகும் காசாப்போருக்கும் உக்ரெயின் போருக்கும் இது பொருந்தும்.
பெருமளவில் உயிரிழப்புகளும் சொத்து நாசமும் ஏற்படுகிறது. இது மனித குலத்துக்கு எதிரான ஒரு குற்றச்செயலாகும். நாடுகள் குழு ஒன்றுக்கு எதிராக இன்னொரு குழு நாடுகளுடன் இணைவதற்கு பதிலாக, இலங்கை ஒரு காலத்தில் அணிசேரா நாடுகள் இயக்கத்துக்கு தலைமை தாங்கிய ஒரு நாடு என்ற வகையில் செங்கடலிலும் உலகின் ஏனைய பாகங்களிலும் நிலவும் நெருக்கடிகளுக்கான மூலவேர்க் காரணிகளைக கையாளுவதற்கு அதன் நல்லெண்ணத்தைப் பயன்படுத்தவேண்டியது அவசியமாகும்.
அரசாங்கத்தின் நோக்கம் பெரும்பான்மையானவர்களினதோ சிறுபான்மையானவர்களினதோ நல்வாழ்வுக்கானதாக அன்றி சகலரினதும் நல்வாழ்வுக்கானதாக — பொதுநன்மைக்கானதாக இருக்கவேண்டும்.
தேசிய உறவுகளிலும் சர்வதேச உறவுகளிலும் நடத்தைகளில் அரசாங்கம் வழங்கவேண்டியிருக்கும் தலைமைத்துவம் ஒழுக்க முறைமையின் அடிப்படையிலானதாக இருக்கவேண்டியது அவசியமாகும்.

