காதல் மனைவியை காரில் தரதரவென இழுத்துச் சென்ற கணவன்

இந்தியாவில் தனது காதல் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து காரில் கணவன் இழுத்து சென்றுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள அணைக்கரைப் பகுதியை சேர்ந்தவர் அபிஷா. முதலாறு பகுதியைச் சேர்ந்தவர் பெர்லின் இருவரும் காதலித்து வந்த நிலையில் இந்த காதலுக்கு இருவரது வீட்டில் கடும் எதிர்ப்பு வந்தது.

எனினும் வீட்டினரைச் சமாதானம் செய்த அபிஷா கடந்த 2021ஆம் ஆண்டு பெர்லினை திருமணம் செய்துகொண்டார். திருமணத்தின் போது 50 சவரன் நகை மற்றும் ஒன்பது லட்சம் ரூபாய் ஒரு சொகுசு கார் என அபிஷாவின் தந்தை தனது மகளுக்குச் சீதனமாகக் கொடுத்துள்ளார்.

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளதுடன் ஓவியரான பெர்லினுக்கு முழு நேர வேலை என்ற ஒன்று இல்லாமல் இருந்துள்ளது. அதோடு, நண்பர்களுடன் ஊர் சுற்றி பொழுதைக் கழித்து வந்துள்ளார்.

மேலும், அவர் அபிஷாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததுடன் கணவரின் கொடுமையை பொறுக்க முடியாத அபிஷா, அவரை பிரிந்து சென்று அதேபகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில், உதவிப் பேராசிரியையாக பணிக்குச் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி மாலை பணி முடிந்து அபிஷா வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே காரில் வந்த பெர்லின் அவரை வழிமறித்துத் தாக்கி தரதரவென காரில் இருந்தபடியே இழுத்துச் சென்றார். இதில் அபிஷா அலறி கூச்சல் இட்டதில் சில இளைஞர்கள் காரைத் துரத்திச் சென்றனறுள்ளனர்.

உடனே மனைவியை காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு வேகமாகத் தப்பிச் சென்றார். கீழே விழுந்த அபிஷாவுக்கு சிறிய காயம் ஏற்பட்டதுடன் அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அபிஷாவின் தந்தை திருவட்டார் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.