
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் : பல நாடுகளை சுனாமி தாக்கும் என எச்சரிக்கை
ஜப்பானின் மத்திய பிராந்தியத்தில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, குடியிருப்பாளர்களை உடனடியாக இப்பகுதியை விட்டு வெளியேற ஜப்பான் அரசு வலியுறுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து கரையோர பகுதியில் ஒரு பெரிய சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது, 5 மீற்றர் (16 அடி) உயரத்திற்கு அலைகள் மேல் எழும்பலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அண்டை நாடுகளான நைகாட்டா மற்றும் டோயாமா மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர், அங்கு அலைகள் 3 மீட்டர்களை எட்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மக்களை குளிரையும் பொருட்படுத்தாமல் உயரமான பகுதிகளுக்குத் தப்பிச் செல்லும்படி மக்களை வலியுறுத்தியுள்ள நிலையில் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல் கள் தெரிவிக்கின்றன.
“உங்கள் வீடு, உங்கள் உடமைகள் அனைத்தும் உங்களுக்கு விலைமதிப்பற்றவை என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம், ஆனால் உங்கள் உயிர்கள் எல்லாவற்றையும் விட முக்கியம். முடிந்தவரை உயர்ந்த இடத்திற்கு ஓடுங்கள்.” என தொலைக்காட்சிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினமான திங்கட்கிழமை நிலநடுக்கத்தின் போது மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுரங்கப்பாதை ரயில்கள் குலுங்கிய வீடியோக்களையும் வெளியிட்டுள்ளனர்.
திங்களன்று 90 நிமிடங்களுக்கு மேல் மத்திய ஜப்பானில் 4.0 ரிக்டர் அல்லது அதைவிட வலுவான 21 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி 16:10 மணிக்கு 7.6 அளவிலான வலுவான நடுக்கம் ஏற்பட்டது.
பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பல டெக்டோனிக் தகடுகள் சந்திக்கும் இடத்தில் அதன் இருப்பிடம் காரணமாக, பூமியில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தும் நாடுகளில் ஜப்பான் ஒன்றாகும். நிலநடுக்கங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் ஜப்பானை உலகின் அதிநவீன சுனாமி எச்சரிக்கை அமைப்புகளில் ஒன்றை உருவாக்க வழிவகுத்தது.
திங்கட்கிழமை நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. 36,000 க்கும் மேற்பட்ட வீடுகள் அப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் போயுள்ளது.
நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அணுமின் நிலையங்களில் இருந்து கதிரியக்கம் கசியும் அபாயம் இல்லை என ஜப்பான் அணுசக்தி ஆணையம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவின் வானிலை ஆய்வு நிறுவனம் திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 18:29 முதல் 19:17 வரை நாட்டின் கிழக்கு கடற்கரையை 0.3 மீட்டர் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது. மலைப்பாங்கான காங்வோன் மாகாணத்தில் வசிப்பவர்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு துறைமுக நகரங்களான விளாடிவோஸ்டாக் மற்றும் நகோட்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதன் அரசு செய்தி நிறுவனமான தெரிவித்துள்ளது.





