நாட்டில் புற்றுநோய் நோயாளர்கள் எதிர்நோக்கியுள்ள அவல நிலை

புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் கதிரியக்க சிகிச்சை சேவையில் தற்போது பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பாராமெடிக்கல் தொழில்களின் கூட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 10 லீனியர் முடுக்கி இயந்திரங்கள் உள்ளதாகவும் அவற்றில் 4 இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதாகவும் அதன் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

மகரகம புற்றுநோய் வைத்தியசாலையில் உள்ள இயந்திரங்களில் ஒன்று, கண்டி தேசிய வைத்தியசாலையில் உள்ள இரண்டு இயந்திரங்களும்,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள ஒரேயொரு இயந்திரமும் தற்போது பழுதடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை பெற வரும் நோயாளர்கள் சிகிச்சை பெற பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டம்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலான இயந்திரங்கள் குறித்த வைத்தியசாலைகளுக்கு அண்மை காலங்களில் வழங்கப்பட்டதாகவும், இதனால் குறுகிய காலத்தில் இயந்திரங்கள் பழுதடைந்தமை தொடர்பில் விசேட விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அதன் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.