யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணத்தில் சந்தேகம் : அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பயிலும் 25 வயதான குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மருந்து ஒவ்வாமை காரணமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து குறித்த மாணவியின் உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு எந்தவிதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட மருந்து தொடர்பில் தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார்.