தவணைக்கட்டணம் செலுத்தாததால் பறிபோன முச்சக்கரவண்டி : குடும்பஸ்தர் எடுத்த தவறான முடிவு

பலாங்கொட – மத்தேகந்த பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் நிதி நெருக்கடி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

லீசிங் தவணை பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால் அவரது முச்சக்கர வண்டியை  தனியார் லீசிங் நிறுவனம்  எடுத்துச் சென்றுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக அவர் வீட்டில் தனியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடிகாரம் பழுதுபார்க்கும் தொழிலாளியான இவர்  முச்சக்கரவண்டியில் கிடைக்கும் வருமானத்தில் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக முச்சக்கர வண்டியின் லீசிங் தவணை பணத்தை அவரால் செலுத்த முடியவில்லை.

அதன்படி கடந்த 14 ஆம் திகதி அவருடைய முச்சக்கரவண்டியை தனியார் லீசிங் நிறுவனத்தினர் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றனர்.

அதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மனைவியும் மகளும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அவரது மனைவி அவரிடம் விவாகரத்து கேட்டதாகவும், பின்னர் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.