சூரியனை விழுங்க முயற்சிக்கும் பாம்பு

கீழே உள்ள இந்த புகைப்படம்  ஜேம்ஸ் பர்கே என்பவரால் 1955ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்.

ஜூன் 20, 1955 அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது.  அதன்போது இலங்கையில் சூரிய கிரகணத்திற்கு தயாராகும் மக்களை இந்த புகைப்படம் காட்டுகிறது

Photo : realceylon

“அந்த நாட்களில் ஒரு பாம்பு சூரியனை விழுங்க முயற்சிக்கும் என்றும் இது 3 முறை முயற்சிக்கும், 3 வது முயற்சியில் அது தோல்வியுற்றால், அது சூரியனை வெளியே துப்பிவிட்டு வெளியேறும் என்று மக்களால் நம்பப்பட்டது என கூறப்படுகிறது”

புராண கதை

ஓர் ஆண்டுக்கு இரண்டு சூரிய கிரகணங்களும் இரண்டு சந்திர கிரகணங்களும் நிகழ்வது வழக்கம். இது அறிவியல் ரீதியாக வானத்தில் நிகழும் அரிய நிகழ்வு.

எனினும் ஜோதிட ரீதியாக ராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களை விழுங்குவதாக இந்து சமய புராண கதைகளில் கூறப்படுகின்றன.

சூரியன், சந்திரனை பழிவாங்க ராகுவும் கேதுவும் பிரம்மனை நினைத்து பல காலம் தவமிருந்து வரம் பெற்றனர்.

இவ்வரத்தின்படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது தடுக்கும் வரத்தை கொடுத்தார் எனவும்,  இதுவே கிரகணம் எனப்படுவதாகவும் புராண கதைகள் கூறுகின்றன.

சூரிய கிரகணம்

சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் சந்திரன் நேராக வந்து, அதன் நிழல் சூரியனை மறைத்தால், அது சூரிய கிரகணம்.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது அதன் நிழல் சந்திரன் மீது விழுந்து சந்திர ஒளியை மறைத்தால் அது சந்திர கிரகணம்.

சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் வரும்.

சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழல் முழுமையாக சூரியனை மறைத்துவிட்டால் அது முழு சூரிய கிரகணம். சந்திரனின் நிழல் சூரியனின் வட்டத்துக்குள் விழுந்து, சூரியன், நெருப்பு வளையமாக தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படும்.

சூரியன் சந்திரனின் நிழலால் பகுதி சூரியன் மட்டும் மறைக்கப்பட்டால் அது பகுதி சூரிய கிரகணம்.

சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது. அதுபோலவே, சந்திரனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தைப் போன்று சூரியனுக்கு உள்ள தூரம் 400 மடங்கு அதிகம்.

எனவே, பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன், சூரியன் இரண்டும் ஒரே அளவில் தெரிகிறது. எனவே, சந்திரனின் நிழல் சூரியனை மறைத்து சூரிய கிரகணத்தை உருவாக்குகிறது.

சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. அப்போது சில சமயம் அருகிலும், சில சமயம் தொலைவிலும் இருக்கும். முழு சூரிய கிரகணம் என்பது சந்திரன் அருகில – அதாவது அண்மையில் இருக்கும்போது ஏற்படும்.

வளைய கிரகணம் என்பது சந்திரன் தூரத்தில் – சேய்மையில் இருக்கும்போது, சந்திரனின் நிழல் சூரியனுக்குள்ளேயே விழும். சூரியனை முழுமையாக மறைக்காது. சூரியன் எட்டிப்பார்த்துக்கொண்டு வெளியே இருக்கும். இதனையே வளைய சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது.

சூரிய கிரகணத்தின் போது மட்டுமல்ல, எப்போதுமே சூரியனை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது.

சூரியனைப் பார்க்கும்போது கண்ணுக்கு எப்போதும் பாதுகாப்பு அவசியம்.