
மத்ரஸாவில் உயிரிழந்த காத்தான்குடி சிறுவன் : மௌலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
-அம்பாறை நிருபர்-
மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் எதிர்வரும் ஜனவரி மாதம் 04 திகதி வரை வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று வியாழக்கிழமை கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸாரின் நீண்ட சமர்ப்பனங்கள் உட்பட ஏனைய விடயங்களை ஆராய்ந்த நீதிவான் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் கல்வி கற்று வந்த மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் மாணவன் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் கடந்த 5 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
