
விடுதியில் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் : 63 வயது போதகர் கைது
கிருலப்பனையில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 63 வயதான போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிருலப்பனை பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகத்தினால் சந்தேகநபர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளவத்தையில் உள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவி ஒருவர் இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த போதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடுதியில் தங்கியிருக்கும் எட்டு பெண்களில், ஒருவர் 23 வயதுடையவர், மீதமுள்ளவர்கள் 11 முதல் 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகள் அவர்களில் ஆறு பேர் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த உடன்பிறந்தவர்கள்.
இவர்களில் ஐந்து சிறுமிகளை போதகர் பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் வழங்கிய தகவல் மற்றும் புகைப்படங்களின் அடிப்படையில் பாதிரியார் கைது செய்யப்பட்ட நிலையில், சிறுமிகள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேற்படி விடுதி தேவாலயத்துடன் இணைக்கப்பட்டு, சட்டப்பூர்வ பதிவு இல்லாமல் இயங்கி வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட போதகர் எதிர்வரும் ஜனவரி 01 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
