
மட்டக்களப்பில் இ.போ.ச பேருந்து சாரதி மீது தனியார் பேருந்து சாரதி தாக்குதல்
மட்டக்களப்பு இ.போ.ச சாரதி ஒருவர் தனியார் பேருந்து சாரதி ஒருவரால் தாக்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு சாலை சாரதி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவிக்கையில்,
பாதிக்கப்பட்ட குறித்த சாரதி நேற்று திங்கட்கிழமை இரவு மட்டக்களப்பிலிருந்து அம்பிலாந்துறைக்கு இ.போ.ச பேருந்தை ஓட்டிச்சென்று அங்கு பேருந்தை நிறுத்திவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
அந்நேரம் இடையில் அவரை வழிமறித்த தனியார் பேருந்து சாரதி ஒருவர் உள்ளிட்ட சிலர் அவரை கேபிள் வயரால் கடுமையாக தாக்கியதாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை மட்டக்களப்பு சாலை முகாமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான சாரதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் மட்டக்களப்பு ஆரையம்பதியை சேர்ந்த சாந்தலிங்கம் (வயது 55) என்பவரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

