மோட்டார் திணைக்களத்திற்கு பதிலாக தானே சாரதி அனுமதி அட்டைகளை வழங்கிய நபர்

இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த தனிநபர்களுக்கு போலியான சாரதி அனுமதி அட்டைகளை உருவாக்கிய குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று புதன்கிழமை நாரஹேன்பிட்டி டபரே மாவத்தைக்கு அருகில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் ஹோமாகம, கினிகத்தேன, கம்பளை, ஹங்கம, இரத்தினபுரி, வெயாங்கொட மற்றும் கந்தானை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு சொந்தமான முத்திரைகள் காணப்பட்டன.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல், வழக்கறிஞர்கள் மற்றும் பல தனியார் நிறுவனங்களின் முத்திரைகள் போன்ற முத்திரைகள் அவரிடம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த நபர்களுக்கு பணத்திற்காக போலியான சாரதி அனுமதிப்பத்திரங்களை உருவாக்கித் தந்ததாகவும், அதேவேளை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வழங்கப்பட்ட போலி ஆவணங்களையும் தாம் உருவாக்கியதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த மோசடி நடவடிக்கையில் வேறு நபர்களும் ஈடுபட்டுள்ளார்களா என்பதை அறிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.