
எட்வர்ட் ஹென்றி தொடர்பில் காட்டும் அக்கறையை ஜோசப் பரராஜசிங்கத்திலும் காட்ட வேண்டும்- சஜித்
காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதைப் போன்று லசந்த விக்கிரமதுங்க, ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட குழு நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மார்ச் 21 தொடக்கம் டிசம்பர் 08 ஆம் திகதி வரை பலதடவைகள் பல விடையங்களை முன் வைத்தேன் , ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் வாரத்திலாவது இந்த கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.
காலனித்துவ ஆட்சியில் ஹென்ரி பேதிரிஸ் படுகொலை செய்யப்பட்டது மிலேட்சத்தனமானது. பேதிரிஸ் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள மூவரடங்கிய குழுவை அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்கள்,சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க, ரிச்சட் சொய்சா,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் படுகொலை மற்றும் சாகரிகா கோமஸ், பிரேம கீர்த்தி அல்விஸ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.
காலனித்துவ ஆட்சியில் படுகொலை செய்யப்பட்ட எட்வர்ட் ஹென்றி தொடர்பில் காட்டும் அக்கறை அண்மை காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள் விவகாரத்தில் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
