அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு ? ….

” அரிது அரிது மானுடனாய் பிறப்பது அரிது ” என்பது எம் முன்னோர் கூறிய முதுமொழி ஆகும். இம் முதுமொழி யானது மனிதப் பிறவியின் அபூர்வத்தன்மையை வெளிப்படுத்துகின்றது. இதற்கமைய பத்துமாத தவத்தின் பின்னரான வரமாய் ஒரு உயிரை இவ் உலகிற்கு அறிமுகம் செய்யும் பெருமையும் பெண்ணையே சாரும் . இதனாலே ” கண் இல்லாதவரும் பெண் இல்லாமல் வாழ முடியாது ” என கூறுகின்றனர் . மேலும் ” மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா ” என கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கூறுகிறார்.

இது எவ்வாறு இருப்பினும் ” அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு ” என்று தம் அன்றாட வாழ்வினை சமையலறையிலேயே கழித்தனர் அன்றைய பெண்கள் . பெண் பிள்ளைகள் பருவமானாள் பள்ளிக்குச் செல்ல தடை விதித்தனர் பாமரர்கள் .தன் தந்தை தமையன் தவிர வேறு ஆண்களோடு பேச அஞ்சினர் பண்டைய பெண்கள் . வெளி உலகம் எது என அறிய முன்னே சின்னஞ்சிறு சிட்டாய் சிறகடித்து பறக்க வேண்டிய இளவயதிலேயே திருமண வாழ்வில் இணைந்து தந்தை, கணவன், சகோதரன் என ஆண் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு அவர்களை சார்ந்தே தன் சுயதையும் நலத்தையும் இழந்து வாழ்ந்தார்கள்.

அன்றைய கால பெண்கள் தங்கள் திறமைகள் அனைத்தையும் அடக்கிக்கொண்டு பிறருக்காக வாழ்ந்து தங்களது வாழ்வை அடுப்பங்கரையிலேயே கழித்தனர். பெண்கள் கல்வியின்றி மூடப்பழக்கங்களில் சிறைப்பட்டு சிந்திக்கும் திறனின்றி தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல் இல்லச் சிறையிலே பூட்டப்பட்டு சமயலறையில் முடங்கிக் கிடந்துள்ளனர். ” அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்ற நிலையிலேயே கல்வியே வேண்டாம் வீட்டுவேலை செய்யத் தெரிந்தால் போதும் என்ற நிலை இருந்தது.

இவ்வாறு ” அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு” என்ற காலம் இப்போது மலையேறி போய் தான் விட்டது இன்று உலகமே வியக்கும் அளவுக்கு படிப்பில் பட்டையை கிளப்பி வருகிறது எம் பெண்வர்க்கம். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்பது அந்தக்காலம் ஆனால் கல் உடைக்கும் வேலையிலிருந்து கணினித் துறை முதல் கொண்டு விண்வெளிக்கு செல்வது வரையிலான அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல் கல்லாக பெண்கள் விளங்கும் அளவிற்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளனர் எம் பெண்கள். பெண்களின் முன்னேற்றத்திற்கு பாரதியார் மூன்று உபாயங்களை கூறுகிறார் முதலாவது உபாயம் கல்வி, இரண்டாவது உபாயம் கல்வி, மூன்றாவது உபாயமும் கல்வியே ! ஆகும். அதாவது ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு கல்வியை தவிர வேறு எந்த உபாயமும் சிறிதும் பயன்படாது என்கிறார். ஒரு ஆணை படிக்க வைத்தால் அவன் மட்டும் முன்னேறுவான். ஒரு பெண்ணைப் படிக்க வைத்தால் அந்த குடும்பமே முன்னேறும் என்கிறார் ஈ. வெ ராமசாமி. இதனை உற்று நோக்குகையில் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பும் தேவை என்ற உண்மை புலனாகின்றது.

அன்றிலும் பார்க்க இன்று எமது சமுதாயம் சற்றேனும் முறைப்பட்டிருக்க காரணம் அன்று அடுப்பங்கரையிலே அடங்கி இருந்த பெண்கள் இன்று பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதுமே ஆகும். பெண்கள் கல்வி அறிவு பெற்று ஆட்சித் துறை, தொழிற்துறை , அறிவியல் , மருத்துவம், சட்டம் , காவல் , இலக்கியம், கல்வி போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றி வெற்றிநடை போடும் பெண்குலத்தின் பெருமையை நம்மால் காண முடிகின்றது.

அன்று அடுப்பூதிய பெண்கள் இன்று ஆகாயத்தில் காற்றை விட கடும் வேகம் கொண்டது பெண்களின் உயர்வு நிலையை எடுத்துக் காட்டுகின்றது. இதற்கு உதாரணமாக ” விண்ணைத் தாண்டி வந்த வண்ணச்சிட்டு கல்பனா சாவ்லா மற்றும் விண்ணை சுற்றிய சூறாவளி சுனிதா வில்லியம்ஸ் போன்றோரை குறிப்பிடலாம் . இதுமட்டுமன்றி விமான ஓட்டுனர் துர்கா பானர்ஜி ஆங்கில கால்வாயை நீந்தியே கடந்த ஆர்த்திஷா , பஸ் ஓட்டுனர் வசந்த குமாரி போன்றவர்கள் அடுப்பூதிய அன்றை பெண்கள் , நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு வீர நடை போடுவது சிறப்புக்குரிய விடயமாகும்.

அன்றைய காலத்தில் பெண்கள் தன் கணவனை இழந்து விட்டால் உடனே உடன்கட்டை ஏறி தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் கோழைகளாக இருந்தனர் . ஆனால் இன்றை பெண்கள் தங்கள் கணவனை இழந்திருந்தாலும் தம் குழந்தைகளுக்காக வாழ்ந்து அவர்களை சமூகத்தில் ஓர் உயரிய பதவியில் அமரச்செய்யும் வரை ஓயாது உழைத்து இறுதியில் வெற்றிவாகை சூடிக்கொள்ள காரணமே அன்று அடுப்பூத்திய பெண்கள் இன்று கல்வித்தரத்தில் உயர்ந்து நிற்றலே ஆகும்.

பெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்பதனை நன்கறிந்து வளர்ச்சி பணியில் ஈடுபட்டு தாங்களும் வாழ்ந்து பிறரும் வாழ வழிவகை செய்கிறார்கள். அன்று அடுப்பங்கரையிலே அடங்கி இருந்த பெண்கள் இன்று 21ம் நூற்றாண்டில் சாதிக்க முடிந்தது வீரப்பெண்களால்! எனவே இன்றும் அவர்களை அடுப்பங்கரையிலே அடக்கி வைத்து விடாமல் கல்வி எனும் படகிலே ஏறச் செய்து கடல் எனும் வாழ்வினை கடந்து கரை எனும் சிகரத்தை தொடச் செய்வோம்.