
மட்டு வாகரையில் பூசாரியின் தாக்குதலில் ஒருவர் கொலை பெண் படுகாயம்
மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பிரதேசத்தில் பேய் விரட்டும்; பூசாரி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் உயிரிழந்த மட்டக்களப்பு புனானை பிரதேசத்தைச் சேர்ந்த அனுர ஜெயலத் (வயது-58) என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது சகோதரியான சுமிதா ஜரங்கனி (வயது-61) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
குறித்த சகோதரியின் காலில் மின்சார தாக்குதலால் ஏற்பட்ட நோயை குணப்படுத்துவதற்காக, மாங்கேணி பிரதேசத்தில் உள்ள பௌத்த பத்தினி தெய்வ ஆலயத்துக்கு இருவரும் அடிக்கடி சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ தினமான கடந்த புதன்கிழமை இந்த சகோதரர் மற்றும் சகோதரியும் காரில் பௌத்த ஆலயத்துக்குச் சென்றனர்.
தனது மனைவிக்கும் குறித்த சகோதரருக்கும் தொடர்பிருப்பதை அறிந்திருந்த பூசகர், அன்றைய தினம் தன்னை நாடி வந்த நபரதும் அவரது சகோதரியினதும் முன்னிலையில் மனைவியை கத்தியால் தாக்க முற்பட்டுள்ளார். அப்போது பூசகரின் மனைவி அங்கிருந்து தப்பியோட, மனைவியுடன் தொடர்புடைய நபர் மற்றும் அவரது சகோதரி மீது பூசகர் தாக்குதலை நடத்தியுள்ளமை ஆரம்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
காரையும் அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்து பூசாரி தப்பியோடி தலைமறைவாகிவிட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்தது.
மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை நேற்று வியாழக்கிழமை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
