
அரச சார்பற்ற நிறுவனம் என்ற பெயரில் பாரிய பண மோசடி : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் போன்று காட்டிக் கொண்டு நிதியுதவி வழங்குவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுயதொழில் செய்வதற்கு நிதியுதவி வழங்குவதாகவும் சிறுவர்களுக்கான புத்தகங்களை வழங்குவதாகவும் கூறி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்துடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சியம்பலாண்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் அரச சார்பற்ற நிறுவன அதிகாரியாகக் காட்டி நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்தமைக்காக முதலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அமைப்பில் சேர உறுப்பினர் கட்டணமாக 600 ரூபாவை ஒவ்வொருவரிடமுமிருந்து வாங்கியுள்ளார்.
அத்திமலே, கெமுனுபுர பிரதேசத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை குறித்த பெண், உறுப்பினர் கட்டணமாக வசூலித்த 26,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை அவர் பொதுமக்களிடமிருந்து மோசடி செய்து பெற்ற 136,000 ரூபாவை கூட்டுறவு கிராம வங்கியில் வைப்பிலிட்டுள்ளார்
அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளாக வேடமணிந்து பொதுமக்களை ஏமாற்றி பணத்தை பெற்றுக்கொண்ட மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் மொனராகலை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும், சியம்பலாண்டுவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவரும் ஆவார்கள்.
சந்தேகநபர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் அத்திமலே மற்றும் சியம்பலாண்டுவ பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறான நிதி மோசடிகளுக்கு ஆளாக வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
