மட்டக்களப்பில் கோயில் மணி ஏழைச் சிறுவனின் உயிரை பறித்த மர்மம் என்ன? யார் கொலையாளி ? ஒலிப்பதிவு இணைப்பு

சுவிட்சர்லாந்திலிருந்து -ச.சந்திரபிரகாஷ்-

மட்டக்களப்பு புதிய எல்லை வீதியை அண்டியுள்ள கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு, கல்முனை இஸ்லாமபாத் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் தற்காலிகமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் கடந்த 29ஆம் திகதி புதன்கிழமை மரணமடைந்த செய்தி பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.

தேசிய மற்றும் உள்ளூர் ஊடகங்களில் சம்பவம் இடம்பெற்ற இடமாக கல்முனை சிறுவர் நன்னடத்தை பாடசாலை , சிறுவர் சீர்திருத்த பள்ளி என செய்திகள் வெளிவந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் இதுவரை குற்றம் செய்யும் சிறுவர்களுக்காக இவ்வாறானதோர் பாடசாலை இல்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் கொழும்பு , நீர்கொழும்பு மற்றும் யாழ்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள சிறுவர் நன்னடத்தை பாடசாலைகளுக்கே இதுவரை நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்டு வந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்திற்கான சிறுவர் சீர்திருத்த பாடசாலைக்கான கட்டிடம் தற்போது கிரான் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற நிலையில், கல்முனையில் இயங்கி வந்தது சிறுவர் பாதுகாப்பு இல்லம்  (Save house ) என்பதை உறுதியாக தெரிவித்துக் கொண்டு இனி விடயத்திற்கு வருவோம்.

சிறுவனின் குடும்ப பின்னணி என்ன..?

மட்டக்களப்பு கொக்குவில் 2ஆம் குறுக்கு வீதியில் வசித்து வந்த ஆனந்ததேவன் தர்சாத் (வயது-14) இந்த மாதம் 11 ஆம் திகதியே இவர் 15வது வயதில் காலடி எடுத்து வைக்கின்றார்.
இவருடைய தாயார் ஒரு சிறிதளவு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தந்தையாரால் கைவிடப்பட்ட ஐவர் கொண்ட குடும்பத்தில் 2009ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி தர்சாத் பிறந்துள்ளார்.

தந்தை வாகரை கித்தூள் பகுதியில் உள்ள ஒரு பெண்ணை மறுமணம் செய்துள்ள நிலையில் அம்மம்மா அப்பம் சுட்டும் ,அண்ணனின் சிறு உழைப்பின் நிழலிலும் இவர்களுடைய குடும்பம் மிகவும் வறுமையிலும் நேர்மையாக வாழ்ந்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த குறித்த சிறுவன் சுவிஸ் கிராமம் நாமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்ற நிலையில் வறுமையின் காரணமாக படிப்பை விட்டுவிட்டு வீதிகளில் போடப்படும் மதுபான போத்தல்கள் மற்றும் மதுபான தகரங்களை பொறுக்கி பிள்ளையாரடியில் உள்ள நாடார் கடையில் கொடுத்து இதன் மூலம் கிடைக்கும் சிறுதொகையில் அம்மம்மாவின் குடும்ப சுமைக்கு தன்னால் முடிந்த சிறுபங்களிப்பை வழங்கியுள்ளமை அயலவர் ஒருவரின் வாக்கு மூலத்தின் மூலம் தெரியவருகின்றது.

வாக்குமூலம் இணைப்பு…

சிறுவன் மீதான குற்றச்சாட்டு என்ன..?

இந்த சிறுவன் கடந்த மாதம் 16ஆம் திகதி கொக்குவில் கொம்பு சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் நந்தி சிலை பொறிக்கப்பட்ட ஒரு சிறிய மணியை திருடிய குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவின் பெயரில் 17 ஆம் திகதி கல்முனை சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் குறித்த கோயிலில் உண்டியல் திருட்டிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதை உறுதிசெய்ய முடியவில்லை.

இந்த திருட்டுக்கு உடந்தையாக அல்லது இதை பெற்றுக்கொண்ட பூசாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த பூசாரி அருகில் உள்ள பனிச்சையடி பகுதியில் சிறிய ஆலயம் ஒன்றை வைத்து நடத்தி வரும் புல்லூமலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது. இதைவிட இந்த பூசாரி தனது ஆலயத்தில் வைத்து மக்களுக்கு சாஸ்திரம் பார்க்கும் தொழிலையும் பகுதி நேரத் தொழிலாக செய்து வந்துள்ளார்.

சம்பவ தினம் நடந்தது என்ன..?

கடந்த 17 ஆம் திகதி காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட சிறுவன் 13வது நாள் கழித்து 29ஆம் திகதி குறித்த காப்பகத்தில் சிறைச்சாலை என அழைக்கப்படும் சிறிய அறையில் அதிகாலை 3.30 மணியளவில் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் என குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பில் குறித்த காப்பகத்தின் உயர் அதிகாரியுடன் நான் தொடர்பினை ஏற்படுத்தி இச்சம்பவம் தொடர்பில் கேட்ட போது…

காப்பகத்தில் 11 சிறுவர்கள் குறித்த தினத்தின் போது இருந்ததாகவும் , உயிரிழந்த சிறுவன் சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு முதல் நாள் அதாவது 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு பல்வேறுவிதமான அசம்பாவிதங்களில் ஈடுபட்டதாகவும் , குறிப்பாக தனது மலக்கழிவுகளைக் கொண்டு பெண் விடுதி காப்பாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அன்றைய தினம் ஒரு மனநோயாளி போல் இச்சிறுவன் செயற்பட்டதாக தனக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் இதை தான் இதுவரை உறுதி செய்யவில்லை எனவும், குறித்த காப்பகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

பூசாரியுடன் சேர்த்து சிறுவனுக்கு கைவிலங்கிடப்பட்டது சரியா..?

பொலிசாரால் கைது செய்யப்படும் நபர் எவராக இருந்தாலும் கைதுசெய்யப்படும் நபரின் பாதுகாப்பு கருதி ( தப்பி ஓடாமல் , தனக்கு தானே தீங்கு விளைவிக்காமல்) கைவிலங்கிடலாம் எனவும் , சிறுவர்களுக்கு கைவிலங்கு போடக் கூடாது என சட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை என ஒருசில சட்டத்தரணிகளின் பதிலாக இருந்தது இதை உறுதிப்படுத்த முடியவில்லை.

ஆனால் சிறுவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டு மனித உரிமை மீறல் என்றதன் அடிப்படையில் இது தவறான விடயமாக பார்கப்படுவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மரணத்தில் சந்தேகம்,  சடலத்தை பொறுப்பேற்க மறுப்பு..?

சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை தெரிவித்ததையடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் அடி காயங்கள் மற்றும் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பெண் காப்பாளர் சிக்கியது எப்படி…?

இந்த சிறுவனின் உடலில் இருந்த காயம்  தொடர்பாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான எம்.எல்.றபீக் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஜனகீதன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த பாதுகாப்பு இல்லத்திற்கு சென்று தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த தினத்தில் கடமையில் இருந்த  திருகோணமலை உப்புவெளியைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமாகாத பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, இரவு உணவை உட்கொண்ட பின்னர் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது. இதைப் போன்று ஏனைய பதில்களும் வழங்கப்பட்ட நிலையில் இவரிடமிருந்து வழங்கப்பட்ட முன்னுக்கு பின்னான வாக்கு மூலத்தினால் இவர் மீது பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து சனிக்கிழமை இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்திய போது, குறித்த சிறுவனை கிரிக்கெட் விக்கெட் கொண்டு தாக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள குறித்த பெண் இன்று திங்கட்கிழமை 4 ஆம் திகதி கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரியவருகின்றது.

இத்தாக்குதலினால் சிறுவனின் நெஞ்சு , முதுகு மற்றும் கால் எழும்புகளில் முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள நிலையில் இதனை இன்று திங்கட்கிழமை வழங்கப்படவுள்ள வைத்திய மரண அறிக்கையின் மூலமே உறுதிப்படுத்த முடியும்.

ஏழைச் சிறுவனுக்கு இலவச சட்ட உதவி கிடைக்குமா..?

தமது ஏழ்மையை பயன்படுத்தி சட்டத்தில் உள்ள ஓட்டைகள் மற்றும் அரச அதிகாரத்தை பயன்படுத்தி தனது தம்பியின் உயிரிழப்பிற்கு நீதி மறுக்கப்படக்கூடாது எனவும், தமக்கு நீதியை பெற்றுக்கொடுக்க சட்டத்தரணிகள் முன்வர வேண்டும் எனவும் மூத்த சகோதரியார் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

மரண வீட்டில் சடலம் இருக்கும் பட்சத்தில் ஒளிப்பதிவு மற்றும் குரல்பதிவு செய்வது ஊடக தர்மம் அல்லாத நிலையில் இறுதிக்கிரியைகள் முடிந்த நிலையில் சகோதரி தானாக முன்வந்து தனது குரல்பதிவினை எமக்கு வழங்கியுள்ளார்.

குரல்பதிவு இணைப்பு….

மரணத்திற்கு யார் பொறுப்பு..?

பல இந்துக் கோயில்களில் ஆலய நிர்வாகம் என்ற பெயரில் பல இலட்சக்கணக்கான நிதிகள் கொள்ளையடிக்கப்படும் நிலையில் ஒரு மணியை திருடிய குற்றத்திற்காக சிறுவனுக்கு கோயில் நிர்வாகத்தால் அல்லது கடவுளால் வழங்கப்பட்டுள்ள தண்டனை மரணமா?

சிறுவனை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த குறித்த கோயில் நிர்வாகத்தினர் சிறுவனின் குடும்ப பின்னணியை அறிந்து ஒரு மன்னிப்பை வழங்கியிருந்தால் ஒரு உயிர் காப்பற்றப்பட்டிருக்கும்.

இந்த சிறுவனின் நடத்தையில் இச்சம்பவத்திற்கு முன்னர் எவ்விதமான குற்றச் செயல்களும் பதிவாகவில்லை எனவும் , அயலவர்களின் பார்வையில் இச்சிறுவன் அமைதியான சுபாவம் கொண்டவராக பார்க்கப்படுகின்ற நிலையில் இவருக்கு நீதி கிடைக்கும் வரை எமது ஊடகப் பயணம் பலவழிகளிலும் தொடரும்…..?