தாதியரின் பணம் மற்றும் கைத்தொலைபேசி திருட்டு

-பதுளை நிருபர்-

லுணுகலை ஹொப்டன் பிராந்திய வைத்தியசாலைக்குள் நேற்று வியாழக்கிழமை இரவு பிரவேசித்ததாக கூறப்படும் திருடன், வைத்தியசாலையின் பெண்கள் பிரிவில் கடமையாற்றும் தாதி ஒருவரின் பணம் மற்றும் கைத்தொலைபேசியை திருடிச் சென்றுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு கைப்பைகளை திருடியதாகவும் அதில் 7400 ரூபா இருந்ததாகவும் திருடப்பட்ட ஸ்மார்ட்போனின் பெறுமதி மதிப்பிடப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வைத்தியசாலையில் இரண்டு ஆண் மற்றும் பெண் வார்டுகள் உள்ளதாகவும், பெண் வார்டில் ஒரு நோயாளியே 30 நாட்களாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது வைத்தியசாலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆண்கள் வார்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட பைகளில் ஒன்று வைத்தியசாலைக்கு வெகு தொலைவில் உள்ள பெட்டிக்கடைக்கு அருகில் இருந்து கண்டெடுக்ப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.